காதல் திருமணம் செய்து கொண்டதால் மகளின் தாலியை அறுத்து எறிந்து தரதரவென இழுத்து சென்ற விவசாயி


காதல் திருமணம் செய்து கொண்டதால் மகளின் தாலியை அறுத்து எறிந்து தரதரவென இழுத்து சென்ற விவசாயி
x
தினத்தந்தி 22 Dec 2021 2:44 AM IST (Updated: 22 Dec 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில், காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் விவசாயி ஒருவர் தனது மகளின் தாலியை அறுத்து எறிந்து தரதரவென இழுத்துச் சென்றார்.

பெங்களூரு:

காதல் திருமணம்

  மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா ஹரதலே கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் நாய்க். விவசாயி. இவரது மகள் சைத்ரா(வயது 21). இவர் ஹரதலே கிராமம் அருகே உள்ள ஹல்லரே கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரா(21) என்ற வாலிபரை கடந்த 1½ வருடமாக காதலித்து வந்தார். இவர்களது காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரியவந்தது. இதில் சைத்ராவின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் சைத்ரா தனது காதலில் உறுதியாக இருந்தார்.

  இதையறிந்த பசவராஜ் நாய்க், தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார். இதுபற்றி அறிந்த சைத்ரா, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது காதலன் மகேந்திராவிடம் தெரிவித்தார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டைவிட்டு வெளியேறிய சைத்ரா, தனது காதலன் மகேந்திராவை சந்தித்தார். பின்னர் இருவரும் நஞ்சன்கூடுவில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

தாலியை அறுத்து எறிந்தார்

  இந்த திருமணத்தில் மகேந்திராவின் நண்பர்கள், அவரது உறவினர்கள் சிலர் கலந்து கொண்டனர். இதுபற்றி அறிந்த சைத்ராவின் தந்தை பசவராஜ் நாய்க், உடனடியாக பத்திரப்பதிவு அலுவலக்த்திற்கு வந்தார். அப்போது சைத்ராவும், அவரது காதலனும் திருமணம் முடிந்த கையோடு பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்களைப் பார்த்த பசவராஜ் நாய்க் ஆத்திரம் அடைந்தார். அவர் நேரடியாக சைத்ராவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரை சரமாரியாக தாக்கிய பசவராஜ் நாய்க், அவருடைய கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து எறிந்தார்.

  பின்னர் அவர், தனது மகளை தரதரவென இழுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள், சைத்ராவை பசவராஜ் நாய்க்கிடம் இருந்து மீட்டனர்.

போலீசில் புகார்

  பின்னர் அவருக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். ஆனால் பசவராஜ் நாய்க் இதுபற்றி நஞ்சன்கூடு போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை மகேந்திரா கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் தனது மகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்குமாறும் கூறியிருந்தார். புகாரின்பேரில் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story