கர்நாடகத்தில், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை


கர்நாடகத்தில், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை
x
தினத்தந்தி 22 Dec 2021 3:01 AM IST (Updated: 22 Dec 2021 3:01 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். ஆனால் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தவும், கிளப் மற்றும் கேளிக்கை விடுதிகளில் 50 சதவீதம் பேர் கூடவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

புத்தாண்டு கொண்டாட்டம்

  கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் உள்ளது. தினசரி பாதிப்பு 300 என்ற அளவில் ஏற்பட்டு வருகிறது. இறப்புகளும் வெகுவாகு குறைந்துவிட்டன. அதே நேரத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 19 பேருக்கு இந்த ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

  இந்த சூழ்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் பெலகாவி சுவர்ண சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநில நிபுணர் குழுவினர் காணொலி மூலம் இதில் கலந்து கொண்டனர்.

அனுமதிக்கக்கூடாது

  இதில் புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுமதிப்பதா? அல்லது அவற்றுக்கு தடை விதிப்பதா? என்பது குறித்தும், கிறிஸ்துமஸ்
பண்டிகையை அனுமதிப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நிபுணர் குழுவினர், ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் புறவெளி பகுதியில் அதிகம் கூட்டம் கூடுவதை அனுமதிக்கக்கூடாது என்றும், அதே நேரத்தில் உள் அரங்குகளில் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்கலாம் என்றும் ஆலேசானை கூறினார்.

  இதையடுத்து இந்த கூட்டத்தில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது என்றும், கிறிஸ்துமஸ் பிரார்த்தனை கூட்டங்களுக்கு அனுமதி அளிப்பது என்றும் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2 டோஸ் தடுப்பூசி

  கர்நாடகத்தில் கொரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த நேரத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களை அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் எம்.ஜி. ரோடு, பிரிகேட் ரோடு உள்ளிட்ட திறந்தவெளி பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

  அதே நேரத்தில் கிளப், கேளிக்கை விடுதிகளில் 50 சதவீதம் பேரை அனுமதிக்கலாம். அங்கும் கூட்டமாக கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் கூட்டமாக கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது. இதை அந்தந்த அடுக்குமாடி குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் அமல்படுத்த வேண்டும். இந்த முடிவு வருகிற 30-ந் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

பிரார்த்தனை

  கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தடை இல்லை. திறந்தவெளியில் பிரார்த்தனை நடத்த அனுமதி இல்லை. உள்அரங்குகளில் பிரார்த்தனை மேற்கொள்ளலாம். ஏனென்றால் அங்கு விருந்து போன்ற நிகழ்ச்சிகள் நடப்பது இல்லை. அதனால் நாங்கள் அதை அனுமதித்துள்ளோம். இன்று (நேற்று) எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

  இந்த கூட்டம் மதியம் 2.45 மணிக்கு தொடங்கி 3.15 மணி வரை நடைபெற்றது. 2-வது ஆண்டாக கர்நாடகத்தில் பொது வெளியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story