‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கழிவுநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
சென்னை எம்.ஜி.ஆர்.நகர் தாமோதர விநாயகர் கோவில் தெருவில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பாதாள சாக்கடை மூடி வழியாக கழிவுநீர் வெளியேறி கொண்டிருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அந்த பிரச்சினை உடனடியாக சரிசெய்யப்பட்டது. மக்களின் கோரிக்கை நிறைவேறியது.
டிரான்ஸ்பார்மரா? குப்பை கொட்டும் இடமா?
சென்னை வியாசர்பாடி மாணிக்க விநாயகர் கோவில் தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த இடமே குப்பைக்கூளமாக மாறியுள்ளது. கொசுக்கள் படையெடுத்து நோய்களை பரப்பி வருகின்றன. பலர் அதை சிறுநீர் கழிப்பிடமாகவே மாற்ற தொடங்கியுள்ளனர். இந்த போக்கு தொடர்ந்தால் சுகாதார சீர்கேட்டின் உதாரணமாக இந்த இடம் நிச்சயம் மாறிவிடும்.
- சமூக ஆர்வலர்கள்.
நாய்கள் விரட்டி பிடிப்பு
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ஈ.சி.ஆர்.) அமைந்துள்ள பாலவாக்கம் பூங்கா தெருவில் நாய்கள் தொல்லையால் மக்கள் அவதிப்படுவது குறித்த செய்தி, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதனையடுத்து அந்த பகுதியில் சுற்றி திரிந்த நாய்கள் மாநகராட்சி நாய் வண்டி மூலம் விரட்டி பிடித்து செல்லப்பட்டது. இந்த நடவடிக்கைக்காக மாநகராட்சிக்கும், ‘தினத்தந்தி’க்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மழைநீர் கால்வாய்க்கு புதிய மூடி
சென்னை கொளத்தூர் யுனைடேட் காலனி 2-வது தெருவில் மழைநீர் கால்வாய் மூடி சேதமடைந்திருந்தது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து அந்த மழைநீர் கால்வாய்க்கு புதிய மூடி போடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
வரலாற்று சுவடு பாழாகி வருகிறது
சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை கடந்த 1966-ம் ஆண்டு கட்டமைக்கப்பட்டது. இதற்காக கல்வெட்டும் அதற்கான வளாகத்திலேயே இருந்தது. அதனைத்தொடர்ந்து பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடந்து வந்தன. இந்த நிலையில் இந்த சுரங்கப்பாதை வரலாற்றை குறிப்பிடும் கல்வெட்டு, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாரிமுனையில் சாலையோரமே போடப்பட்டுள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையின் வரலாற்று சுவடு, மழை-வெயிலில் கிடந்து பாழாகி வருகிறது.
- சமூக ஆர்வலர்கள்.
நாய்கள் தரும் அச்சம்
சென்னை கொடுங்கையூர் கே.கே.டி.நகர் 9-வது பிளாக்கில் உள்ள 2 தெருக்களிலும் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களின் ‘சீட்’களை கிழித்தும், வாகன ஓட்டிகளை துரத்தியும் கடிக்க வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தவிர அப்பகுதிவாசிகளும் அச்சத்திலேயே இருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பொதுமக்கள், கொடுங்கையூர்.
வேகத்தடைகள் அமைக்கப்படுமா?
சென்னை கீழ்ப்பாக்கம் சன்னியாசிபுரம் 1-வது தெருவில் அப்பகுதியை சேர்ந்த சிலர் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை இயக்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். இதனால் குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள். எனவே அத்தெருவில் 2 அல்லது 3 வேகத்தடைகள் அமைக்க வேண்டும். இதன்மூலம் தேவையற்ற விபத்துகள் தடுக்கப்படும்.
- நந்தகுமார், கீழ்ப்பாக்கம்.
பழுதடைந்து நிற்கும் டிரான்ஸ்பார்மர்
திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் கிராமம் விவேகானந்தர் சாலையில் (ராஜாஜி முதியோர் இல்லம் அருகில்) உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்த நிலையில் உள்ளது. டிரான்ஸ்பார்மரின் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விரிசல் விட்டுள்ளன. அருகில் உள்ள மின்கம்பங்களும் பழுதடைந்து உள்ளன. எனவே மின்வாரிய அதிகாரிகள் இந்த டிரான்ஸ்பார்மர் குறித்து கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- சமூக ஆர்வலர்கள், அரண்வாயல் கிராமம்.
கொசுக்கள் படையெடுப்பால் நிம்மதி போச்சு...
சென்னை அம்பத்தூர் அயப்பாக்கம் அருகே உள்ள தமிழ்நாடு ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் கொசுக்கள் தொல்லை மிகுதியாக இருக்கிறது. ஈ மொய்ப்பது போல கொசுக்கள் மொய்த்து, இரவில் இப்பகுதிவாசிகளின் தூக்கத்தை கெடுக்கிறது. அருகில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்திடமும் சொல்லிப்பார்த்தும் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே இப்பகுதியை சேர்ந்தவர்களின் நிம்மதிக்காக கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா?
- பொதுமக்கள், அயப்பாக்கம்.
அரசு பள்ளி மைதானத்தில் மழைநீர் தேக்கம்
காஞ்சீபுரம் மாவட்டம் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி காமாட்சிநகரில் உள்ள அய்யப்பன்தாங்கல் அரசு பள்ளி மைதானத்தில் மழைநீர் தேங்கி மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. தேங்கியுள்ள மழைநீரை அகற்றினால் மாணவர்கள் விளையாட பயன்படுத்த முடியும். நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பொதுமக்கள், அய்யப்பன்தாங்கல்.
பொது கழிப்பறை மூடப்பட்டிருப்பது ஏன்?
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெருங்களத்தூர் ரெயில் நிலைய வளாகத்தில் பொது கழிப்பறை அமைக்கப்பட்டது. ஆனால் இக்கழிப்பறை ஒரு வருடமாக மூடப்பட்டிருக்கிறது. இந்த கழிப்பறை சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
- வி.எல்.கணபதி, பழைய பெருங்களத்தூர்.
Related Tags :
Next Story