திருநின்றவூர் அருகே மொபட்டில் இருந்து விழுந்த பெண் சாவு - மாடு குறுக்கே வந்ததால் விபரீதம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மாடு குறுக்கே வந்ததால் மொபட்டில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆவடி,
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூர் திருமுருகன் நகரை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (வயது 58). இவர் நேற்று முன்தினம் தனது மருமகள் உமாமகேஸ்வரி (35) என்பவருடன் மொபட்டில் அமர்ந்து கொண்டு திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் பகுதிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது திருநின்றவூர் பெரியபாளையம் சாலை போலீஸ் நிலையம் எதிரே மாடு ஒன்று குறுக்கே வந்தது.
அப்போது உமா மகேஸ்வரி திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் நிலைதடுமாறி பின்னால் அமர்ந்து இருந்த சாமுண்டீஸ்வரி கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் தலையில் பின்பகுதியில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாமுண்டீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story