பிளாஸ்டிக் விழிப்புணர்வு வாகன பிரசாரம்


பிளாஸ்டிக் விழிப்புணர்வு வாகன பிரசாரம்
x
தினத்தந்தி 22 Dec 2021 5:47 PM IST (Updated: 22 Dec 2021 5:47 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
வாகன பிரசாரம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை தொடர்பான விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறும் போது, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை, தமிழக அரசு 25.6.2018 நாளிட்ட அரசாணையில் வெளியிட்டது. இதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சுகுழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டு உள்ளன.
விழிப்புணர்வு
சென்னை ஐகோர்ட்டு மற்றும் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆகியவையும் பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக விழிப்புணர்வு பிரசார வாகனம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகனம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பிரசாரம் மேற்கொள்ளும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சத்யராஜ், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேம்நாத், உதவி பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story