ரூ 21 கோடி ஹெராயின் பறிமுதல்; மேலும் 3 பேர் கைது
தூத்துக்குடியில் ரூ 21 கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் வீட்டில் பதுக்கிய ரூ.21 கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதிரடி வேட்டை
தூத்துக்குடி கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள், வெங்காய விதைகள், கடல் அட்டை, போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறையினர், கியூ பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கடந்த 15-ந் தேதி தூத்துக்குடியில் ஒரு வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அதிரடி வேட்டையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோன்று தூத்துக்குடி மாவட்ட போலீசாரும் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரோந்து பணி
இந்த நிலையில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத் தலைமையில், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ், பென்சிங் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தூத்துக்குடியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த அண்ணாநகரை சேர்ந்த மைதீன் மகன் அன்சார் அலி (வயது 26), யோகீசுவரர் காலனியை சேர்ந்த முனியசாமி மகன் மாரிமுத்து (26), டூவிபுரத்தை சேர்ந்த ஷாஜகான் மகன் இம்ரான்கான் (27) ஆகியோரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
ஹெராயின் பறிமுதல்
அவர்கள் போதை தரும் பொருளை வைத்து இருப்பது தெரிய வந்தது. உரிய பரிசோதனைக்கு பிறகு அந்த பொருள் ஹெராயின் என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து 162 கிராம் ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதாவது, ஹெராயினை தருவைகுளத்தை சேர்ந்த ஒரு மீனவரிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்தனர். அதன்பேரில் தனிப்படையினர் தருவைகுளம் ரோஸ்நகரை சேர்ந்த அந்தோணிமுத்து (42) என்பவர் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர்.
ரூ.21 கோடி
அப்போது, அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு டிரம்மில் 21 பிளாஸ்டிக் பைகளால் ஆன பொட்டலங்கள் இருந்தன. இந்த பொட்டலங்களை ஆய்வு செய்தபோது, அதில் ஹெராயின் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதில் மொத்தம் 21 கிலோ ஹெராயின் இருந்தது. உடனடியாக அந்தோணிமுத்துவை போலீசார் மடக்கி பிடித்து, கைது செய்தனர். தொடர்ந்து 21 கிலோ ஹெராயினையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.21 கோடி என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தருவைகுளம் நவமணி நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரேம் என்ற பிரேம்சிங் (38), பட்டினமருதூரைச் சேர்ந்த சவுகத் அலி மகன் கசாலி (27) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு தகவல்கள்
இந்த நிலையில் ஹெராயின் பிடிபட்டது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கைதான 6 பேரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது, அந்தோணிமுத்து 2 விசைப்படகுகள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தங்குகடல் மீன்பிடிக்க சென்று உள்ளார்.
அவர் மினிக்காய் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, ஒரு பெரிய பொட்டலம் கடலில் மிதந்து வந்தது. இதனை அந்தோணிமுத்து எடுத்து பார்த்தபோது, அதில் 30 பாக்கெட்டுகளில் 30 கிலோ வெள்ளை நிற பவுடர் இருந்தது.
பல்வேறு நபர்களுக்கு அனுப்பி வைப்பு
இதனை பார்த்த அந்தோணிமுத்து, அதனை விற்பனை செய்யலாம் என்று நினைத்து வீட்டுக்கு கொண்டு வந்து பதுக்கி வைத்து இருந்தார். ஆனால் அவருக்கு அந்த பார்சலில் இருந்த பொருள் என்ன? என்பது தெரியவில்லை.
இதனால் தருவைகுளம் நவமணி நகரைச் சேர்ந்த பிரேம், பட்டினமருதூரைச் சேர்ந்த கசாலி ஆகியோர் மூலம், அந்த வெள்ளை நிறப்பொடி குறித்த விவரங்களை அறிய முயன்றார். இதனால் அவர்களிடம் பாக்கெட்டில் இருந்த மாதிரிகளை பல்வேறு நபர்களுக்கு அனுப்பி பரிசோதித்து உள்ளார். இதற்காகவே 2½ கிலோவுக்கும் அதிகமாக செலவு செய்து உள்ளனர். இதில் அந்த பவுடர் ஹெராயின் போதைப்பொருள் என்பது தெரியவந்தது.
மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
அவர்கள், தூத்துக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த முருகன் என்பவரை தொடர்பு கொண்டனர். அவர் ஹெராயின் போதைப்பொருள் பற்றி அறிந்து இருந்ததால், அதனை விற்பனை செய்து தருவதாக கூறியுள்ளார். இதற்காக 1 கிலோ ஹெராயினை ரூ.1½ லட்சத்துக்கு வாங்கினாா். அவரிடம் 6 கிலோ ஹெராயினை அந்தோணிமுத்து கொடுத்தார். அதன்மூலம் வந்த தொகையை அந்தோணிமுத்து உள்ளிட்டவர்கள் பிரித்து எடுத்து உள்ளனர். தற்போது அவரது வீட்டில் இருந்த 21 கிலோ ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய முருகன் என்பவரை ேபாலீசாா் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் வீட்டில் பதுக்கிய ரூ.21 கோடி ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story