உடல்நிலை குணமாகும் வரை முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்


படம்
x
படம்
தினத்தந்தி 22 Dec 2021 7:36 PM IST (Updated: 22 Dec 2021 7:36 PM IST)
t-max-icont-min-icon

உடல்நிலை குணமாகும் வரை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது பதவியை வெறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

மும்பை, 
உடல்நிலை குணமாகும் வரை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது பதவியை வெறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜனதா தெரிவித்துள்ளது. 
 அறுவை சிகிச்சை
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முதுகு தண்டு அறுவை சிகிச்சைக்காக 3 வாரங்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து படிப்படியாக உடல்நிலை தேறி வருகிறார். 
மேலும் தனது அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷா பங்களாவில் இருந்தபடி பணிபுரிந்து வருகிறார்.
முதல்-மந்திரியின் உடல் நல பிரச்சினை காரணமாக அவர் கலந்துகொள்ள ஏதுவாக குளிர்கால சட்டசபை கூட்டம் நாக்பூருக்கு பதில் மும்பைக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் நேற்று தொடங்கிய கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை. 
இந்தநிலையில் நேற்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கலந்துகொள்ளாததை ஏற்க முடியாது
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மராட்டிய சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் கலந்துகொள்ள முடியாவிட்டால், அவர் தனக்கு பதில் பணி செய்ய யாரையாவது நியமிக்க வேண்டும். 
சட்டசபை அமர்வில் முதல்-மந்திரி முழுமையாக வராமல் இருப்பதை ஏற்க முடியாது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் குணம் அடையும் வரை முதல்-மந்திரி பொறுப்பை சிவசேனாவை சேர்ந்த அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்த வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 
கூட்டணிகளை நம்ப மாட்டார்
மேலும் சந்திரகாந்த் பாட்டீல், “முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசை நம்ப மாட்டார்.  ஏனெனில் அவர்கள் முதல்-மந்திரி பதவியை ஏற்றால் பின்னர் விலக மாட்டார்கள். எனவே சிவசேனாவை சேர்ந்த மாநில மந்திரிகள் அல்லது அவரது மகன் ஆதித்ய தாக்கரேயிடம் அவர் பொறுப்பை வழங்கலாம்” என்று கிண்டலாக கூறினார். 
மேலும் பல்வேறு துறைகளுக்கான ஆள்சேர்ப்பு நடைமுறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு குறித்து தெரிவிக்கையில், “பல மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஏற்கனவே இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டசபை கூட்டத்தொடர் அமர்வில் கண்டிப்பாக இந்த பிரச்சினையை எழுப்புவோம். 2 ஆண்டுகள் முன்பு நடந்த போலீஸ் ஆள்சேர்ப்பு நடைமுறை விசாரணையில் இருப்பதால் அதுகுறித்து சி.பி.ஐ. விசாரணையை கோருவோம்” என்றார். 
 பதிலடி
இந்த நிலையில் சந்திரகாந்த் பாட்டீலின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில், “மாநில நீர்வளத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உடல்நிலை நன்றாக உள்ளது. அவர் எப்போது வேண்டுமானாலும் சட்டசபைக்கு வரலாம். 
வேறு யாரிடமும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் வீட்டில் இருந்தபடியே செயல்படுவார்” என்றார். 


Next Story