சசிகலாவின் உறவினர் விவேக்கிடம் கோவையில் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் உறவினர் விவேக்கிடம் தனிப்படை போலீசார், கோவையில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கோவை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் உறவினர் விவேக்கிடம் தனிப்படை போலீசார், கோவையில் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கோடநாடு வழக்கு
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான எஸ்டேட், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் உள்ளது.
இந்த எஸ்டேட்டில் உள்ள பங்களாவில், கடந்த 24-4-2017 அன்று கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின்போது அங்கு காவலாளியாக இருந்த ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். கொள்ளையர்கள் தாக்கியதில், மற்றொரு காவலாளியான கிருஷ்ணதாபா படுகாயம் அடைந்தார்.
இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கார் டிரைவர் சாவு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 9 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், அடுத்த சில நாட்களில்(28-ந் தேதி) சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தார்.
விபத்தில் சிக்கிய சயான்
மேலும் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த சயான் என்பவர் மறுநாள்(29-ந் தேதி) தனது மனைவி மற்றும் மகளுடன் காரில் சென்றபோது பாலக்காடு அருகே நடந்த விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி, மகள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சயான், சிகிச்சைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமாரும் தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கிடையில் கோடநாடு வழக்கில் கூடுதலாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் மறுவிசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கு குறித்து முழு விசாரணை நடத்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
வழக்கில் தொடர்புடையவர்களின் மரணம் அடுத்தடுத்து நடந்ததால், கோடநாடு சம்பவத்துக்கும், இதற்கும் தொடர்பு எதுவும் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் இந்த வழக்கு விசாரணை சூடுபிடித்தது.
மேலும் 2 பேர் கைது
தொடர் விசாரணை அடிப்படையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூடலூர் கிளை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இருவரையும் தனித்தனியாக சோலூர்மட்டம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். மேலும் புதிதாக கிடைக்கும் தகவல்களை கொண்டு வழக்கில் தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
சசிகலாவின் உறவினரிடம் விசாரணை
இந்தநிலையில் கோடநாடு சம்பவம் தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டி.வி. இயக்குனருமான விவேக்கிடம் நேற்று தனிப்படை போலீசார் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் விசாரணை நடத்தினர்.
3 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தெரிந்த தகவல்களை கூறுமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
கோடநாடு எஸ்டேட் மற்றும் நிர்வாகம் தொடர்பாகவும் தனிப்படையினர் கேட்டனர். இதில் சில விவரங்களை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை பொருத்தவரை விவேக்கிடம் மீண்டும் ஒருசில நாட்களில் விசாரணை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
பரபரப்பு
இதுவரை பலரிடம் விசாரணை நடத்திய போலீசார், இந்த வழக்கில் சசிகலாவின் குடும்பத்தினரிடம் விசாரணையை தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோடநாடு சம்பவம் நடைபெற்றபோது சசிகலா சிறையில் இருந்தார். இதனால் சம்பவம் குறித்து எஸ்டேட் நிர்வாகம் தரப்பில் இருந்து விவேக்கிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றும், அதனாலேயே அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று(வியாழக்கிழமை) கோடநாடு வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story