மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கம்
மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கம்
ஊட்டி
2 மாதங்களுக்கு பின்னர் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மலை ரெயில்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்ததால், மேட்டுப்பாளையம்-குன்னூர் ரெயில் பாதையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதுடன், பாறைகள் உருண்டு விழுந்ததில் தண்டவாளம் சேதமடைந்தது.
கடந்த நவம்பர் மாதம் 4, 5-ந் தேதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ஊழியர்கள் மலை ரெயில் பாதையில் விழுந்து கிடந்த மண்ணை அகற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
2 மாதங்களுக்கு பிறகு இயக்கம்
கடந்த 20-ந் தேதி குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த நிலையில் 2 மாதங்களுக்கு பின்னர் நேற்று முதல் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணியளவில் மலை ரெயில் புறப்பட்டது.
குன்னூரை கடந்து மதியம் 12.5 மணியளவில் ஊட்டி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. 5 பெட்டிகளில் 180 சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலமும், குன்னூரில் இருந்து ஊட்டி வரை டீசல் என்ஜின் மூலமும் இயக்கப்பட்டது.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
மழை பாதிப்பால் நிறுத்தப்பட்டு நீண்ட நாட்களுக்கு பின்னர் மலை ரெயில் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, ஊட்டியில் உள்ள சுற்றுலா மையங்களை சுற்றி பார்ப்பதற்காக வந்தோம். மலை ரெயிலில் பயணம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மலைப்பகுதியில் குகைகளை கடந்து வந்தது, வனப்பகுதிகள், இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தோம்.
சில இடங்களில் கீழே இறங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கொரோனா பாதிப்புக்கு பின்னர் தற்போதுதான் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளோம் என்றனர்.
செல்பி எடுத்தனர்
அதேபோல் பலரும் மகிழ்ச்சி அடைந்ததுடன், ரெயில் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மதியம் 2 மணியளவில் ஊட்டியில் இருந்து மலை ரெயில் புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு சென்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வர வாய்ப்பு உள்ளது. ஊட்டி-குன்னூர் இடையே தினமும் 3 முறை மலை ரெயில் இயக்கப்படுகிறது.
Related Tags :
Next Story