பிஏபி வாய்க்கால் மூலம் கோதவாடி குளம் நிரம்பியது
பிஏபி வாய்க்கால் மூலம் கோதவாடி குளம் நிரம்பியது
கிணத்துக்கடவு
பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் கோதவாடி குளம் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளம் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதனால் தன்னார்வலர்கள் அந்த குளத்தை சீரமைத்து தண்ணீர் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர். இதையடுத்து பி.ஏ.பி. வாய்க்கால் மூலம் கோதவாடி குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து குளம் நிரம்பியது. 30 ஆண்டுகளுக்கு பிறகு குளத்தில் தண்ணீர் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் கோதவாடிகுளம் முழுகொள்ளளவை எட்டியதால் குளக்கரையில் விவசாயிகள், பொதுமக்கள் தண்ணீர் மறுகால் சென்ற பகுதியில் விளக்கேற்றி, பட்டாசு வெடித்து மலர் தூவி கொண்டாடினார்கள்.
விவசாயம் செழிக்கும்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- கோதவாடி குளத்திற்கு பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து உபரி தண்ணீர் திருப்பி விட தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது.
நவம்பர் மாதம் 11-ந்தேதி முதல் மெட்டுவாவி வழியாகவும், செட்டியக்காபாளையம் கிளை வாய்க்கால் வழியாகவும் வாய்க்கால் உபரி தண்ணீர் கோதவாடி குளத்திற்கு திறந்து விடப்பட்டது. 11.74 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க கூடிய கோதவாடிகுளத்திற்கு தற்போது தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் உபரி தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் நேற்று முன்தினம் குளம் நிறைந்து தண்ணீர் மறுகால் சென்றது.
குளத்தில் தண்ணீர் தேங்கியதால் கோதவாடி குளத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இனிமேல் இந்த பகுதியில் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்றனர்.
Related Tags :
Next Story