வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 104 பேருக்கு கொரோனா. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உள்ளதாகவும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வேலூர்
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உள்ளதாகவும் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை தமிழக மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். மேலும் கொரோனா குறித்த நர்சிங் மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அவரும் மாணவிகளுடன் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் பஸ்சில் ஏறிச்சென்று முககவசம் அணியாத பயணிகளுக்கு முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுரை வழங்கி முககவசங்களை வழங்கினார்.
பஸ்சுக்காக காத்திருந்த சிறுமி முககவசம் அணியாமல் இருந்திருந்தார். அவருக்கு ராதாகிருஷ்ணன் முககவசத்தை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நகர்நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் 2-வது மண்டல அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் இயக்கமாக....
கொரோனா தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 85 சதவீதம் பேர் முதல் தவணையும், 55.2 சதவீதம் பேர் 2-வது தவணையும் தடுப்பூசி போட்டுள்ளனர். இது நல்ல முன்னேற்றமாகும். பலரது முயற்சியால் வேலூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 82.2 சதவீதமும், 2-ம் தவணை தடுப்பூசி 50 சதவீதமும் போடப்பட்டுள்ளது.
பலர் தற்போதும் முககவசம் அணியாமல் உள்ளனர். உலக அளவில் இந்த கவனக்குறைவு உள்ளது. மக்களிடையே மாற்றம் வரவேண்டும். இது மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.
ஒருவருக்கு ஒமைக்ரான்
தமிழகத்துக்கு வந்த நைஜீரியாவை சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. உடன் இருப்போருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் எஸ்-ஜீன் என்பது கண்டறியப்பட்டுள்ளது. 48 பேருக்கான முடிவுகள் நாளை முதல் வரஉள்ளது. 19 நாடுகளில் இருந்து வந்த நபர்களுக்கு இது கண்டறியப்பட்டுள்ளது.
பாதிப்பில்லாத நாடுகள் மற்றும் பாதிப்புடைய நாடுகள் என 19 நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 39 நபர்களுக்கு முதல்நாளில் அதாவது விமானநிலையத்தில் இருந்து வெளியே செல்லும் முன்பே கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 104 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதில் 22 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 82 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
முடிவுகள் வரப்பெற்றதில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நபர் ஒரு இறப்பு நிகழ்ச்சிக்கு வந்தவர். அவருடன் விமானத்தில் பயணித்த 93 பேரையும் கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளது. 8 பேருக்கு டெல்லா வகை வைரசும் உள்ளது. இதுகுறித்து யாரும் பதட்டம் அடைய வேண்டாம்.
3-வது தவணைக்கு கோரிக்கை
18 முதல் 44 வயது வரை 68 லட்சம் பேரும், 45 வயது முதல் 60 வயது வரை 9 லட்சம் பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 43 லட்சம் பேரும் முதல் தவணை தடுப்பூசி போடவில்லை. போடாதவர்களுக்கு அனைத்துத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 3-வது தவணை தடுப்பூசி போட அனுமதி வரவில்லை. இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு இல்லை. ஆக்சிஜன் வசதி பயன்படுத்தப்படவில்லை. பொதுமக்களின் ஒத்துழைப்பு என்பது முக்கியம். கொரோனாவால் இறப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. ஒருபகுதியில் 10 சதவீதத்துக்கு மேல் நோய் பரவினால் அந்த பகுதியில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தேசிய தொழில்நுட்ப தடுப்பூசி குழு பரிந்துரைத்தால் மட்டுமே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
டெங்கு காய்ச்சல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் 2017-ம் ஆண்டில் தான் அதிகமாக இருந்தது. இந்தாண்டு இதுவரை 5,525 பேருக்கு டெங்கு வந்துள்ளது. இதில் 669 பேர் குணமாகாதவர்கள். நாளொன்றுக்கு 30 முதல் 50 பேருக்கு உறுதியாகிறது. இதை தடுக்க கொசுமருந்து அடிப்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலத்தில் பறவை காய்ச்சல் உள்ளதால் 13 எல்லை மாவட்டங்கள் கண்காணிக்கப்படுகிறது.
தீவிரமடையுமா?
எந்த வல்லுனர்களாலும் ஒமைக்ரான் பரவல் குறித்து கணிக்க முடியவில்லை. அதன் விளைவு குறித்து அறிந்து கொள்ள முடியவில்லை. தீவிரமடையுமா? என்பது ஓரிரு வாரங்களில் தெரியும். நாங்கள் உலக பொது சுகாதார நிறுவனம் தெரிவிக்கும் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். தமிழகத்தில் ஒமைக்ரான் கண்டறிய பரிசோதனை ஆய்வகம் உள்ளது. இதை தேசிய தொற்றுநோய் மையத்தின் துணை ஆய்வகமாக அங்கீகரிக்க வேண்டும். அதன் பின்னர் இங்கு ஒமைக்ரான் கண்டறியும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story