தீயில் கருகி இறந்த மாணவி சாவுக்கு நீதி கேட்டு மறியல்
பள்ளி வளாகத்தில் தீயில் கருகி இறந்த மாணவி சாவுக்கு நீதி கேட்டு திண்டுக்கல், கொடைக்கானலில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. திண்டுக்கல்லில் போலீசாருடன் தள்ளு, முள்ளுவில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 170 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்:
தீயில் கருகி மாணவி சாவு
கொடைக்கானல் அருகே பாச்சலூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்த பிரித்திகா என்ற மாணவி, கடந்த 15-ந்தேதி பள்ளி வளாகத்தில் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தாள். இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் பல்வேறு குழுக்கள் அடங்கிய போலீசார், மாணவி எப்படி இறந்தாள்? அவளை யாரேனும் தீ வைத்து எரித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் சம்பவம் நடந்து 8 நாட்கள் ஆகியும் துப்புத்துலங்காமல் மர்மம் நீடித்து வருகிறது.
ஆர்ப்பாட்டம்
இதற்கிடையே மாணவி சாவுக்கு நீதி கேட்டு கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் திண்டுக்கல் கல்லறை தோட்டம் அருகே நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைவர் ஹரிகரன் தலைமை தாங்கினார். மகளிரணி தலைவி அன்னலட்சுமி, மாவட்ட தலைவர் தனபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பாச்சலூரில் தீயில் கருகி இறந்த மாணவியின் சாவில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தள்ளு-முள்ளு, கைது
சில மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காட்டாஸ்பத்திரியில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவி சாவில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாத போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர்.
அப்போது போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடியே வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 30 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானலில் மறியல்
இதேபோல் மேல்மலை கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர், கொடைக்கானல் ஏரிச்சாலைக்கு நேற்று திரண்டு வந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆர்.டி.ஓ.மோகன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சீனிவாசன், இமானுவேல் ராஜ்குமார், தாசில்தார் முத்துராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே அங்கிருந்து ஊர்வலமாக சென்ற கிராம மக்கள் மூஞ்சிக்கல் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். கிராம மக்களில் ஒரு பிரிவினர், மீண்டும் ஏரிச்சாலையில் மறியல் செய்தனர்.
சுற்றுலா பயணிகள் பாதிப்பு
அடுத்தடுத்து நடந்த போராட்டங்களினால் கொடைக்கானல் நகரமே பரபரப்பாக காணப்பட்டது. 3 மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நீடித்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிள் என அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்து நின்றன.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டிப்போ பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசாரும், வருவாய்த்துறையினரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கொடைக்கானலுக்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவி மரணம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனிடையே தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கூக்கால் கிராம மக்கள் நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இந்தநிலையில் கொடைக்கானல் நகர, ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் மூஞ்சிக்கல் பகுதியில் அகல் விளக்கு ஏற்றப்பட்டு மாணவியின் உருவபடத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். இதில் நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மேலும் மாணவியின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story