அகஸ்தீஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவருக்கு சித்தர் குருபூஜை விழா
அகஸ்தீஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவருக்கு சித்தர் குருபூஜை விழா
தாராபுரம்,
தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் அகத்திய முனிவருக்கு சித்தர் குருபூஜை விழா இன்று நடக்கிறது.
ஆற்றுமணலில் லிங்கம்
தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் உள்ளது. அகத்திய மாமுனிவா் அமராவதி ஆற்றில் குளித்து விட்டு சிவபூஜை செய்ய ஆற்று மணலை லிங்கமாக பிடித்து வழிபாடு செய்தார். அதனால் இக்கோவிலில் உள்ள இறைவன் அகஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.
தமிழகத்தில் சில இடங்களில் மணலில் பிடித்து வைத்த சிவலிங்கங்கள் உள்ளன. ஆனால் அந்த சிவலிங்கங்கள் கரைந்து விடக்கூடுமோ என்ற அச்சத்தில் அங்கு தினசரி அபிஷேகம் நடைபெறுவது இல்லை. ஆனால் மணலால் ஆன தாராபுரம் அகஸ்தீஸ்வரருக்கு தினசரி அபிஷேகம் நடந்து வருகிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்பது இன்று வரை அதிசயமாக உள்ளது.
குருபூஜை
இக்கோவிலில் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான கொன்றைமலர் தலவிருட்சமாக உள்ளது. மேலும் இக்கோவிலில் பஞ்சபூத லிங்கங்களும் ஒரே சன்னதியில் அமைந்து உள்ளன என்பது தனிச்சிறப்பு.
அதோடு நவக்கிரகங்களில் ராஜா, ராணி என்று சொல்லப்படும் ஒளிக்கிரங்களான சூரிய பகவானும், சந்திரபகவானும் சுற்றுப்பிரகாரத்தில் தனித்தனி சன்னதிகளில் சிவபெருமானுக்கு எதிரே அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் வீற்றிருக்கும் அகத்திய சித்தருக்கு அவரது பிறந்த நட்சத்திரமான மார்கழி ஆயில்ய நன்னாளில் குருபூஜை செய்வது வழக்கம். அதன்படி இந்த வருடம் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு அகத்திய மாமுனிவருக்கு குருபூஜை விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அகத்திய மகா சித்தர் குருபூஜை விழாக்குழுவினர் செய்து வருகின்றனா்.
Related Tags :
Next Story