விழுப்புரத்தில், தள்ளுவண்டியில் பிணமாக கிடந்த சிறுவனை தூக்கி வந்த 2 பேர் சி.சி.டி.வி. பதிவில் சிக்கியுள்ளனர் அடையாளம் காண்பதில் தனிப்படை போலீசார் தீவிரம்


விழுப்புரத்தில், தள்ளுவண்டியில் பிணமாக கிடந்த சிறுவனை தூக்கி வந்த 2 பேர் சி.சி.டி.வி. பதிவில் சிக்கியுள்ளனர் அடையாளம் காண்பதில் தனிப்படை போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 22 Dec 2021 10:48 PM IST (Updated: 22 Dec 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில், தள்ளுவண்டியில் பிணமாக கிடந்த சிறுவனை தூக்கி வந்த 2 பேர் சி.சி.டி.வி. பதிவில் சிக்கியுள்ளனர். அவர்கள் யார் ? என அடையாளம் காண தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


விழுப்புரம்,

விழுப்புரம் மேல்தெரு பகுதியில் கடந்த 15-ந்தேதியன்று துணிகளை இஸ்திரி செய்ய பயன்படுத்தப்படும் தள்ளுவண்டியில் 4 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். 

அவனது உடல் பிரேத பரிசோதனை முடிவில் சிறுவனின் உணவுக்குழாயில் 2 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாததால் அவன் உணவின்றி பட்டினியால் இறந்திருப்பதும் தெரியவந்தது.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
மேலும் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார், சிறுவன் எந்த ஊரை சேர்ந்தவன்?. பெற்றோர் யார்? அவனை இங்கு கொண்டு வந்து போட்டு சென்றது யார்?  என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 சி.சி.டி.வி. காட்சி

இந்த நிலையில்  விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவான காட்சிகளை கைப்பற்றி, அதனை பார்வையிட்டனர். அப்போது,  விழுப்புரம் புதிய பஸ் நிலையம், திருச்சி நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் இருக்கும் கேமராக்களில், கடந்த 14-ந் தேதியன்று நள்ளிரவு புதிய பஸ் நிலையத்தில் இருந்து 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அந்த சிறுவனின் மீது துணியால் மூடியபடி சிறுவனை தனது தோளில் சுமந்தபடி நடந்து செல்வதும், அந்த நபருடன் சுமார் 55 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரும் உடன் செல்வதும் பதிவாகியுள்ளது.

மேல்தெரு பகுதி சென்றதும் அங்குள்ள தள்ளுவண்டியில் துண்டை விரித்து அதன் மீது அந்த சிறுவனை படுக்க வைத்துவிட்டு பின்னர் மீண்டும் அவர்கள் இருவரும் அங்கிருந்து நடந்தே புதிய பஸ் நிலையம் வந்து பஸ் ஏறிச்சென்றதும் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகியுள்ளது. 

இவர்கள் அன்று நள்ளிரவு 12 மணி முதல் 1.30 மணிக்குள் சிறுவனை தள்ளுவண்டியில் போட்டுவிட்டு பஸ் ஏறிச்சென்றிருப்பதாக சி.சி.டி.வி. காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது. 

இருப்பினும் அவர்களது முகம், சி.சி.டி.வி. காட்சியில் தெளிவாக பதியவில்லை. இதனால் அவர்களை எளிதில் அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விரைவில் கண்டுபிடிப்போம்

இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறுகையில், சிறுவன் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக கிடைத்துள்ள வீடியோ காட்சிகள் மூலம் அடையாளம் காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறுவனின் சட்டை காலரில் தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஸ்டிக்கர் இருப்பதால் அனைத்து அங்கன்வாடி ஊழியர்களின் வாட்ஸ்-அப் குழுக்களுக்கும் சிறுவனின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை அனுப்பி இதுபற்றி தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி பக்கத்து மாவட்டங்களில் உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் வாட்ஸ்-அப் குழுக்களுக்கும் இதுபற்றி விவரங்கள் அனுப்பப்பட்டு ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம். எனவே விரைவில் சிறுவன் பற்றிய முழு விவரத்தையும் கண்டுபிடிப்போம் என்றார்.

Next Story