பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி
தளி, டிச.23-
பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
பஞ்சலிங்க அருவி
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டிஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. இந்த அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் இருப்பது மட்டுமல்ல கமகம நறுமணத்தையும் அளிக்கிறது. அதிலும் தண்ணீர் ஜில்லென்று இருப்பதால் குளிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சலிங்க அருவியில் குளிக்காமல் செல்வது இல்லை. அப்படி குளிக்காமல் சென்றால் மனதில் குறைஇருப்பது போன்று தோன்றும். இதனால் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும், அருவியில் குளித்து மகிழவும், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருகிறார்கள்.
அனுமதி
கொரோனா பரவலால் அருவியல் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு திரும்பிச் சென்ற வண்ணம் இருந்தனர். இதற்கிடையில் பஞ்சலிங்க அருவியை பராமரிக்கும் பணியை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர்.அதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்ததாக தெரிகிறது.அதை பரிசீலனை செய்த மாவட்ட நிர்வாகம் பஞ்சலிங்க அருவி பராமரிப்பு பணியை மீண்டும் கோவில் நிர்வாகத்தின் வசமே ஒப்படைத்தது.
இந்த சூழலில் நேற்று அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதன் காரணமாக ஏராளமானோர் அருவி பகுதியில் திரண்டனர்.மேலும் கோவிலுக்கு வருகை தந்த அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் அருவிக்கு சென்று வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.அதுமட்டுமின்றி அருவி பகுதியில் அமர்ந்து குடும்பத்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன் உறவினர்களுக்கும் அனுப்பி மகிழ்ந்தனர்.இதனால் கோவில் மட்டும் அருவிப் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
Related Tags :
Next Story