கள்ளக்குறிச்சி அரகண்டநல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது
கள்ளக்குறிச்சி அரகண்டநல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் போலீஸ்காரர்கள் பாஸ்கர், மணிமாறன், அந்தோணிராஜ் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் ஏமப்பேர் பீத்தாங்கரை ஏரிக்கரை பகுதிக்கு சென்றனர். அங்கே போலீசாரை கண்டதும் 2 மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 4 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். ஆனால் போலீசார் அவர்களை விடாமல் பின்னால் துரத்திச்சென்று பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் கல்வராயன்மலை பகுதி கிளாக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் சடையன்(வயது 39), கள்ளக்குறிச்சி கல்வராயன்மலை கொடுந்துறை சித்தன்(40), கள்ளக்குறிச்சி அக்ரகார தெரு சிவகுமார்(23), ஏமப்பேர் மூப்பனார் கோவில் தெரு பரணிதரன் (21) என்பதும் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளுடன் அதில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இவர்களில் சித்தன் மீது ஏற்கனவே கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அரகண்டநல்லூர் ரெயில் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதற்காக நின்று கொண்டிருந்த டி.தேவனூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கேசவன்(வயது 23), எஸ் கொல்லூர் கிராமம் பாம்பு அடிச்சான் பாறை பகுதி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அசோக்(19) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ¼ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story