திருக்கோவிலூர் அருகே அரசு ஊழியர் வீட்டில் ரூ 4 லட்சம் நகை பணம் கொள்ளை


திருக்கோவிலூர் அருகே  அரசு ஊழியர் வீட்டில் ரூ 4 லட்சம் நகை பணம் கொள்ளை
x
தினத்தந்தி 22 Dec 2021 11:08 PM IST (Updated: 22 Dec 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே அரசு போக்குவரத்து கழக ஊழியர் வீ்ட்டில் புகுந்து ரூ 4 லட்சம் மதிப்புள்ள நகை பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்


திருக்கோவிலூர்

அரசு ஊழியர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள டி.தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 55). இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். 
இந்த நிலையில் சீனிவாசன் கடந்தவாரம் வீட்டை பூட்டி விட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது பெற்றோரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். 

நகை-பணம் கொள்ளை

பின்னர் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் இருந்து வந்த சீனிவாசன் வீ்ட்டின் முன்பக்க கதவில் போடப்பட்ட பூட்டு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. சீனிவாசன் வீட்டில் இல்லாததை அறிந்து கொண்டு யாரோ மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே புகுந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டது தெரியவந்தது.  கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்பநாய் சாய்னா கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த கைரேகைகள், தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story