நாமக்கல்லில் பெண் படுகொலை சாக்குமூட்டையில் கட்டி உடல் கிணற்றில் வீச்சு
நாமக்கல்லில் பெண் படுகொலை சாக்குமூட்டையில் கட்டி உடல் கிணற்றில் வீச்சு
நாமக்கல்:
நாமக்கல்லில் பெண்ணை கொலை செய்து உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசி உள்ளனர். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண் உடல் மீட்பு
நாமக்கல் ரோஜா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான கிணறு சாலையோரம் உள்ளது.
இந்த கிணற்றில் அழுகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாகவும், அவரது உடலின் ஒரு பகுதி சாக்குமூட்டையில் கட்டி இருப்பதாகவும் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பெண்ணின் உடலை மீட்டு நாமக்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தகவல் அறிந்ததும் நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பெண்ணின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை
கிணற்றில் பிணமாக மிதந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை மர்ம நபர்கள் கொலை செய்து சாக்கு மூட்டையில் உடலை கட்டி கிணற்றில் வீசி சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அவர் யார்? என்பது தெரியவந்தால் மட்டுமே கொலைக்கான காரணம்? கொலையாளிகள் யார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story