மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்பு
லாலாபேட்டை அருகே மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான்.
லாலாபேட்டை
பள்ளி மாணவன்
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த வடவம் பாடியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் லோகேஷ் (வயது 15). இவன் தரகம்பட்டியில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் கடந்த 20-ந்தேதி பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தான்.
பிறகு வெளியே சென்ற லோகேஷ் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சரஸ்வதி லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கிணற்றில் பிணம்
இந்தநிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள தங்களது தோட்டத்து வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றுக்கு சென்று ராதாகிருஷ்ணன்-சரஸ்வதி தம்பதி பார்த்துள்ளனர். அப்போது லோகேஷ் கிணற்றில் பிணமாக கிடந்தான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிராம நிர்வாக உதவியாளர் கோகுலகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் அங்கு வந்து, கிணற்றில் பிணமாக கிடந்த மாணவர் லோகேஷ் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது லோகேஷ் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது கண்போரை கண்கலங்க செய்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மாணவர் லோகேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, லோகேஷ் கிணற்றில் தவறி விழுந்து இறந்தானா? அல்லது தற்கொலை செய்து கொண்டானா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story