போலீசாரை கண்டித்து சாலைமறியல்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 22 Dec 2021 11:48 PM IST (Updated: 22 Dec 2021 11:48 PM IST)
t-max-icont-min-icon

தரகம்பட்டி அருகே போலீசாரை கண்டித்து சாலைமறியல் நடந்தது.

தரகம்பட்டி,
மனைவி-குழந்தைகள் மாயம்
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள கடவூர் வட்டம், வரவணை கிராமம்,  பாப்பணம்பட்டியை சேர்ந்தவர் பொக்லைன் ஆபரேட்டர் கோவிந்தராஜ் (வயது 30). இவரது மனைவி பிரித்தா (26). இந்ததம்பதிக்கு ரனத் (6) என்ற மகனும், மம்மூத்தி (4) என்ற மகளும், சைத்ரா என்ற 4 மாத குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் கடந்த 15-ந்தேதி கோவிந்தராஜ் உறவினர் வீட்டு இறப்பிற்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. 
இதையடுத்து அக்கம், பக்கத்தில் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் கோவிந்தராஜின் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சந்தேகத்தின்பேரில் அந்த வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிந்தாமணிப்பட்டி போலீஸ் நிலையத்தில் கோவிந்தராஜ் கடந்த 16-ந்தேதி புகார் அளித்தார். ஆனால் இதுவரை புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். 
சாலைமறியல்
இதனால் போலீசாரை கண்டித்து நேற்று கோவிந்தராஜ் தனது உறவினர்களுடன் திருச்சி-பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 இதில், புகார் மனு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story