மின்சாரம் தாக்கி டிரைவர் பலி; மெக்கானிக்கிற்கு தீவிர சிகிச்சை
மார்த்தாண்டம் அருகே டிப்பர் லாரி மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி டிரைவர் பரிதாபமாக பலியானார். மெக்கானிக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே டிப்பர் லாரி மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி டிரைவர் பரிதாபமாக பலியானார். மெக்கானிக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
லாரி டிரைவர்
மார்த்தாண்டம் அருகே உள்ள பயணம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 48). இவருக்கு சுஜா மேரி(40) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
செல்வராஜ் ஒரு டிப்பர் லாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் அவர், லாரியில் கிரீஸ் அடைப்பதற்காக மார்த்தாண்டம் அருகே சிராயன்குழியில் உள்ள ஒரு பழுதுபார்க்கும் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.
மின்கம்பியில் உரசியது
லாரி பழுதுபார்க்கும் நிலையத்தில் மெக்கானிக்காக காஞ்சிரகோடு கண்ணன்விளையை சேர்ந்த டேனி(31) என்பவர் இருந்தார். டேனி கிரீஸ் அடிப்பதற்காக லாரியின் பின் பக்கத்துக்கு சென்றார். உடனே, செல்வராஜ் டிரைவர் இருக்கையில் அமர்ந்தவாறு லாரியின் பின் பகுதியை மேலே தூக்குவதற்கான கம்பியை இயக்கினார். அப்போது, லாரியின் டிப்பர் பகுதி மேலே சென்றபோது அந்த வழியாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் டிப்பர் வழியாக மின்சாரம் செல்வராஜ் இயக்கிய கம்பியில் பாய்ந்தது.
இதில், செல்வராஜ் மீது மின்சாரம் பாய்ந்து இருக்கையிலேயே உடல் கருகினார். மேலும், கிரீஸ் அடிக்கும் பணியில் இருந்த மெக்கானிக் டேனியும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு மயங்கி கிடந்தார்.
டிரைவர் பலி
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அங்கு டிரைவர் கருகிய நிலையிலும், மெக்கானிக் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், டிரைவர் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கும், டேனியை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.
அங்கு செல்வராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். டேனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தி வருகிறார். மின்கம்பியில் லாரி உரசியதில் மின்சாரம் தாக்கி டிரைவர் பலியான சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story