அரசு பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்கள் விதைப்பு
முதன் முறையாக அரசு பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்கள் விதைக்கப்படுகிறது.
நச்சலூர்,
விதைப்பண்ணை
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், இனுங்கூரில் மாநில அரசு விதைப்பண்ணை 8.6.1963 முதல் செயல்பட்டு வருகின்றது. கரூர் மாவட்டத்திற்கு தேவையான ஆதார விதைகளை உற்பத்தி செய்து இந்த பண்ணையில் விதை நெல்லை சுத்திகரிக்கப்பட்டு வட்டார வேளாண்மைத்துறை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2012-13 முதல் 2015-16-ம் ஆண்டு வரை 12 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்து வந்த நிலையில் 2016-17-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக உயந்து 2021-22 நடப்பாண்டில் 70 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரிய நெல் ரகங்கள் விதைப்பு
கரூர் மாவட்டத்தில் முதன்முறையாக அரசு விதைப்பண்ணையில் பாரம்பரிய நெல் ரகங்களான தூய மல்லி 5 ஏக்கர் பரப்பளவிலும், மாப்பிள்ளை சம்பா 3 ஏக்கரிலும், கருப்பு கவுனி 2 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மற்ற ரகங்களான டி.கே.எம்-13,சி.ஆர்.1009, ஏ.டி.டி.53-54 ஆகிய ரக நெல் பயிர்களும் கோ 7 ரக துவரை உள்பட 60 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன.
இயற்கை முறையில்...
பாரம்பரியமாக முன்னோர்கள் காலத்தில் அதிக சத்துக்கள் உள்ள கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, தூய மல்லி ஆகிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு சாகுபடி செய்தனர்.
மேலும் ரசயான உரம் இடமால் இயற்கை முறையில் வேப்பம் புண்ணாக்கு, பஞ்ச காவ்யம், மீன் அமிலம், பூச்சி விரட்டி செடிகள் உள்பட பல வகை செடி கொடிகளை பயன்படுத்தி பயிர்களுக்கு இயற்கை உரமாக பயிர்களுக்கு தெளித்து அதிக மகசூல் ஈட்டினர். இதனால் இந்த ரக அரிசியில் அனைத்து சத்துக்களும் அப்படியே மனிதர்களுக்கு கிடைத்ததால் எந்த நோயும் கிட்ட அன்டாமல் இருந்தது.
நன்றாக வளர்ந்த பயிர்கள்
இதன் அடிப்படையில் தற்போது இயற்கை முறையை பயன்படுத்தி பாரம்பரிய நெல் ரகங்களை அரசு விதைப்பண்ணையில் சாகுபடி செய்தது விவசாயிகளிடயே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கருப்பு கவுனி நன்றாக வளர்ந்து பூட்டு வெளியே தெரிகின்றன. மாப்பிள்ளை சம்பா, தூய மல்லி ஆகிய நெல் ரக பயிர்கள் வளர்ந்து பச்சைபசேலென காட்சியளிக்கின்றன.
விவசாயிகளுக்கு மானிய விலையில்..
இந்த ரகங்களின் அறுவடை காலம் 150 நாட்கள் முதல் 160 நாட்கள் வளர்ந்து அறுவடை செய்யப்படும். அறுவடை செய்யப்பட்ட நெல்லை சுத்திகரிக்கப்பட்டு கரூர், தாந்தோணிமலை, அரவகுறிச்சி, கடவூர், தோகைமலை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, க.பரமத்தி ஆகிய வட்டார வேளாண்மைத்துறை மையத்திற்கு அனுப்பப்படுகிறது. பின்னர் மானிய விலையில் நெல் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story