போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்ைத அ.தி.மு.க.வினர் முற்றுகை. விருதுநகர் போலீசார் அழைத்து சென்ற 2 பேர் குறித்து தகவல் அளிக்கும்படி மனு


போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்ைத அ.தி.மு.க.வினர் முற்றுகை. விருதுநகர் போலீசார் அழைத்து சென்ற 2 பேர் குறித்து தகவல் அளிக்கும்படி மனு
x
தினத்தந்தி 1 Jan 2022 12:00 AM IST (Updated: 1 Jan 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் போலீசார் அழைத்துச் சென்ற அ.தி.மு.க.பிரமுகர்கள் எங்கே எனக் கேட்டு முன்னாள் அமைச்சர் உள்பட அ.தி.மு.க.வினர் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

விருதுநகர் போலீசார் அழைத்துச் சென்ற அ.தி.மு.க.பிரமுகர்கள் எங்கே எனக் கேட்டு முன்னாள் அமைச்சர் உள்பட அ.தி.மு.க.வினர் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலை வாங்கித் தருவதாக மோசடி

வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை போலீசார் தேடி வருகின்றனர். அவருடன் தொடர்பில் இருந்ததாக ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த நகர அ.தி.மு.க.இளைஞர் பாசறைச் செயலாளர் ஏழுமலை மற்றும் புதுப்பேட்டை அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விக்கி என்கின்ற விக்னேஷ், ஆகியோரை கடந்த 28-ந் தேதி விருதுநகர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். 

அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்ட 2 பேரை பற்றி கடந்த 5 நாட்களாக எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி தலைமையில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., நகரச் செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.ஜி.ரமேஷ், கோவி. சம்பத்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு குவிந்தனர்.

அவர்களுடன் ஏழுமலை மனைவி ராஜேஸ்வரி, விக்னேஸ்வரன் மனைவி பவித்ரா மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்களும் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு முன்பு குவிந்தனர். 

போலீசாரை கண்டித்து கோஷம்

அப்போது அவர்கள் திடீரென, போலீஸ் அராஜகம் ஒழிக என்றும் அழைத்துச்சென்ற அ.தி.மு.க.வினர் எங்கே என்றும் கேட்டு கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அமைதிப்படுத்தினார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனை சந்தித்து அவர்கள் மனு அளித்தனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏழுமலை, மற்றும் விக்னேஸ்வரனை 5 நாட்களுக்கு முன்பு அதிகாலை விருதுநகர் போலீசார் வந்து அழைத்துச் சென்றுள்ளனர், அவர்களது குடும்பத்தினரிடம் என்ன காரணம் என்றும் கூறவில்லை தற்போது அவர்களுடைய நிலைமை என்ன? அவர்கள் குற்றவாளிகள் என்றால் நீதிபதி முன்பு காட்டி அவர்கள் சிறையில் அடையுங்கள், 24 மணி நேரத்தில் போலீசார் அழைத்துச் சென்றால் அவர்களுடைய நிலைமை என்ன என்று தெரியப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

போலீஸ் சூப்பிரண்டு பதில்

 அதற்கு போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நாங்கள் விருதுநகர் போலீசாரிடம் தொடர்பு கொண்டு பேசி மாலைக்குள் தெரியப்படுத்துவதாக கூறினார். பின்னர் விக்னேஸ்வரன் மனைவி பவித்ரா, ஏழுமலை மனைவி ராஜேஸ்வரி தனித்தனியாக போலீஸ் சூப்பிரண்டிடம் கணவனை கண்டுபிடித்து தருமாறு மனு அளித்தனர்,

முற்றுகைப் போராட்டத்தில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி, டி.டி.சி.சங்கர், நாகேந்திரன், அ.தி.மு.க. வழக்கறிஞர்கள், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

போக்குவரத்து நிறுத்தம்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. 

Next Story