புதுக்கோட்டையில் மழை:நெற்கதிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை


புதுக்கோட்டையில் மழை:நெற்கதிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 1 Jan 2022 12:26 AM IST (Updated: 1 Jan 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் பரவலாக மழை பெய்தது. நெற்கதிர்கள் சாய்ந்து ஈரப்பதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

புதுக்கோட்டை, 
பரவலாக மழை
தமிழகத்தில் கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மழை பெய்தது. புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்தது. தொடர்ந்து நள்ளிரவிலும் மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து பகல் 11 மணிக்கு மேல் லேசாக தூறிய படி இருந்தது. அதன்பின் இந்த மழை பரவலாக இடைவிடாமல் பெய்தது. இந்த மழையினால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்தபடியும், சிலர் குடையை பிடித்தபடியும் சென்றனர்.
பனிப்பொழிவு
இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மார்கழி மாதத்தில் பொதுவாக பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதன்படி தான் தற்போதும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் பருவ நிலையில் மாற்றத்தால் மழை பெய்தது. மார்கழியில் இப்படி மழை பெய்கிறதே என பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பேசினர்.
தற்போது சம்பா நெல் சாகுபடி அறுவடைக்கு தயாராகி வருகிற நிலையில் மழை பெய்ததால் விவசாயிகள் சற்று கலக்கமடைந்துள்ளனர். அறுவடை காலத்தில் நெற்கதிர்கள் வீணாகி போகுமா? என அச்சமடைந்துள்ளனர்.
நெற்கதிர்கள் பாதிப்பு
இந்த நிலையில் மழையினால் நேற்று சில இடங்களில் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அறுவடை எந்திரங்கள் வயலின் அருகே நிறுத்தப்பட்டிருந்தன. பெருமநாடு அருகே சில வயல்களில் நெற்கதிர்கள் சாய்ந்து ஈரப்பதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். 
இவ்வளவு நாள் பயிரிட்டு வளர்ந்து வந்த நிலையில் அறுவடை செய்கிற நேரத்தில் மழையினால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
கொட்டித் தீர்த்த மழை
கீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் ஆரம்பித்த மழை மாலை வரை சுமார் 4 மணி நேரம் இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடலை மற்றும் நெற்பயிர்களை சாகுபடி செய்து உள்ளனர். தற்போது அறுவடை காலம் என்பதால் விவசாய பயிர்கள் மழையில் நனைந்து சேதம் அடையும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
சார்பதிவாளர் அலுவலகம்
கீரனூர் தாலுகா அலுவலக கட்டிடம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. தற்போது மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. மராமத்து பணிகள் காரணமாக நேற்று பெய்த மழையால் சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் மழை நீர் கசிய ஆரம்பித்தது. இதனால் பத்திரப்பதிவு ஆவணங்கள் மழையில் நனைந்து சேதமடையும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, ஊழியர்கள் அந்த ஆவணங்களை மாற்று இடத்தில் வைத்தனர். கட்டிடத்தில் மழைநீர் கசிவது குறித்து உயர் அதிகாரிகளுக்கு சார்பதிவாளர் அலுவலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் வேதனை
விராலிமலை ஒன்றிய பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்து காலை 7 மணி வரை மிதமான மழை பெய்தது. மதியம் 2.15 மணியளவில் மாத்தூர், ஆவூர், நீர்பழனி, ஆலங்குளம், விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழையாகவும், மாலை 4 மணி வரை அடை மழையாகவும் பெய்தது.
இந்த மழை மலம்பட்டி, கத்தலூர், வேலூர் உள்ளிட்ட விராலிமலை ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்தது. இதனால் வயல்வெளிகள் மற்றும் சாலையோரங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்துள்ள நெற்பயிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நேற்று பெய்த மழையால் அறுவடை பாதிக்கப்படும் என்றும் இந்த மழை மேலும் தொடர்ந்தால் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி பாதிப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கால்நடைகள் அவதி
திருவரங்குளம் வட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து அதிகாலை முதல் அடை மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தன.

Next Story