4 ஆண்டுகளில் 4-வது முறையாக மதுரை வருகிறார், மோடி


4 ஆண்டுகளில் 4-வது முறையாக மதுரை வருகிறார், மோடி
x
தினத்தந்தி 1 Jan 2022 1:47 AM IST (Updated: 1 Jan 2022 1:47 AM IST)
t-max-icont-min-icon

4 ஆண்டுகளில் 4-வது முறையாக பிரதமர் மோடி மதுரை வருகிறார். அவர் 12-ந் தேதி மதுரையில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார்.

மதுரை,

4 ஆண்டுகளில் 4-வது முறையாக பிரதமர் மோடி மதுரை வருகிறார். அவர் 12-ந் தேதி மதுரையில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார்.

மருத்துவ கல்லூரிகள் திறப்பு

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் 100 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதில் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது இதற்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
எனவே இந்த 11 மருத்துவ கல்லூரிகளுக்கான திறப்பு விழா, விருதுநகரில் வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

வரவேற்பு

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி 12-ந் தேதி மதியம் புதுச்சேரியில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விருதுநகர் செல்கிறார். 
விருதுநகரில் நடைபெறும் மருத்துவ கல்லூரி விழாவில் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வருகிறார். மதுரையில் அவர் பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெறும் “மோடி பொங்கல் விழாவில்” கலந்து கொள்கிறார். இந்த விழா மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடக்கிறது.
பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் விழா நடைபெறும் மண்டேலா நகர் வருகிறார். அப்போது வழிநெடுகிலும் அவருக்கு தமிழர் பராம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பொங்கல் விழாவில் 10 ஆயிரத்து 8 குடும்பங்கள் கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் உள்பட 18 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

4-வது முறையாக...

நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்ற பின் இதுவரை 4 முறை மதுரை வந்துள்ளார். 5-வது முறையாக வர இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ராமேசுவரத்தில் நடந்த அப்துல்கலாம் மணிமண்டப திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதுரை வந்தார்.
அதன்பின் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். அதே ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி தேனியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மோடி மதுரை வந்தார். அதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மதுரை வந்தார். அப்போது அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தார்.
தற்போது 2022-ம் ஆண்டு தொடக்கத்திலேயே மதுரை வந்து பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். 
அதன்படி பிரதமர் மோடி கடந்த 2019 முதல் இதுவரை 4 ஆண்டுகளில் 4-வது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மதுரை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story