வாங்கிய அரிவாளை திரும்ப கொடுக்காததால் வாலிபர் அடித்து கொலை

வாங்கிய அரிவாளை திரும்ப கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.
ஹலகூர்: வாங்கிய அரிவாளை திரும்ப கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.
தகராறு
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே முத்தத்தி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 35). விவசாயி. கடந்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி முத்துராஜின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து உறவினர் உடலை தகனம் செய்ய வனப்பகுதிக்கு சென்று விறகு வெட்டி வர முத்துராஜ் முடிவு செய்தார். இதற்காக அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி சஞ்சீவமூர்த்தி என்பவரின் அரிவாளை வாங்கி கொண்டு முத்துராஜ் சென்றார்.
ஆனால், அரிவாளை முத்துராஜ் திரும்ப கொடுக்கவில்லை என தெரிகிறது. சஞ்சீவ மூர்த்தி பலமுறை கேட்டும் முத்துராஜ் அரிவாளை கொடுக்கவில்லை. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சஞ்சீவ மூர்த்தி, முத்துராஜை சரமாரியாக அடித்து, உதைத்து தாக்கி உள்ளார். இதில் முத்துராஜ் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே முத்துராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஹலகூர் போலீசில் உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் முத்துராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாயி கைது
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வாங்கிய அரிவாளை திரும்ப கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் முத்துராஜை, சஞ்சீவ மூர்த்தி அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஹலகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சீவ மூர்த்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story