பொங்கல் பரிசு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது
தஞ்சை மாவட்டத்தில் சேமிப்பு கிடங்குகளில் இருந்து பொங்கல் பரிசு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் சேமிப்பு கிடங்குகளில் இருந்து பொங்கல் பரிசு பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.
பொங்கல் பரிசு பொருட்கள்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ரேஷன் அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பையும், கரும்பும் பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது.
சேமிப்பு கிடங்குகள்
இதற்காக சென்னையில் இருந்து பொங்கல் பரிசுப் பொருட்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு மற்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, மனையேறிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளிலும் பொங்கல் பரிசு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி
தற்போது அந்த பரிசு பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு நாளில் மக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிடப்படும் தேதியில் வந்து ரேஷன் பொருட்களை வாங்கி செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story