அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை சொந்த செலவில் எடுத்து செல்ல நிர்பந்தம்


அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை சொந்த செலவில் எடுத்து செல்ல நிர்பந்தம்
x
தினத்தந்தி 1 Jan 2022 2:05 AM IST (Updated: 1 Jan 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

விலையில்லா பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு, சொந்த செலவில் எடுத்து செல்ல வேண்டும் என ஆசிரியர்களை நிர்ப்பந்தம் செய்வதால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர்:
விலையில்லா பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளுக்கு, சொந்த செலவில் எடுத்து செல்ல வேண்டும் என ஆசிரியர்களை நிர்ப்பந்தம் செய்வதால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாடப்புத்தகங்கள்
தஞ்சை வட்டாரத்தில் 140-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், புத்தக பைகள், காலணிகள், சைக்கிள்கள், சீருடைகள் மற்றும் கணித உபகரணங்கள் போன்றவற்றை தமிழகஅரசு வழங்கி வருகிறது. இந்த பொருட்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மொத்தமாக லாரிகளில் தஞ்சை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன.
ஒவ்வொரு வட்டாரத்துக்கு ஒரு பள்ளியில் இறக்கி வைத்து அங்கிருந்து மற்ற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி தஞ்சை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், சீருடைகள் எல்லாம் தஞ்சையை அடுத்த ரெட்டிப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த பாடப்புத்தகங்கள், சீருடைகளை வட்டாரம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு எடுத்து செல்ல அந்தந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.
எதிர்ப்பு
இந்த பாடப்புத்தகங்கள் மற்றும் பொருட்களை எடுத்து செல்ல அதற்கான செலவு தொகையை அரசு ஒதுக்கீடு செய்தும், ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வந்து எடுத்து செல்ல வேண்டும் என நிர்பந்தம் செய்வதால் இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களை கல்வித்துறை அதிகாரிகள் சமாதானம் செய்ததால் அவர்கள் புத்தகங்களை எடுத்து சென்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் கார்த்திகேயன் கூறும்போது, தமிழக அரசு மாணவர்களின் நலனுக்காக அவர்களுக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. இந்த பொருட்களை வட்டாரத்துக்கு ஒரு பள்ளி வீதம் தேர்வு செய்து அங்கு கொண்டு வந்து இருப்பு வைத்து, அங்கிருந்து பிரித்து வினியோகம் செய்யப்படுகிறது.
உத்தரவுக்கு மாறாக
இந்த பொருட்களை அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் கொண்டு செல்ல வேண்டும் என கல்வித்துறைக்கு தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவுக்கு மாறாக ஆசிரியர்களை நேரில் வந்து புத்தகங்களை எடுத்து செல்ல நிர்பந்தம் செய்யப்படுகிறது. புத்தகங்களை எடுத்து செல்வதற்கான செலவு தொகைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொகையை செலவு செய்யாமல் ஆசிரியரின் சொந்த செலவில் லோடுஆட்டோக்களில் பொருட்களை எடுத்துச்செல்ல நிர்பந்தம் செய்கின்றனர் என்றனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ஒரு பள்ளியில் கொண்டு வந்து பொருட்களை வைத்து, அங்கிருந்து பிரித்து அனுப்புவது வழக்கம். ஆசிரியர்கள் வந்து எடுத்து செல்கின்றனர். ஆசிரியர்களின் கோரிக்கையை அரசுக்கு கூறி, இனி வருங்காலத்தில் அதற்கான நிதியை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story