முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி ஒளியக்கூடாது
x
தினத்தந்தி 1 Jan 2022 2:23 AM IST (Updated: 1 Jan 2022 2:23 AM IST)
t-max-icont-min-icon

வழக்கை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி, ஒளியக்கூடாது என்று தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

தஞ்சாவூர்:
வழக்கை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி, ஒளியக்கூடாது என்று தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
பேட்டி
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இலக்கை அடையும் வரை எந்த சக்தியாலும் எங்களை தடை செய்ய முடியாது. தேர்தல் வெற்றி, தோல்விகளால் நாங்கள் துவண்டு விட்டோம் என்று யாராவது நினைத்தால் அது அவர்களே தங்களை ஏமாற்றிக்கொள்வதாக அர்த்தம். நாங்கள் ஒரு சமூகப் பொறுப்புள்ள அரசியல் இயக்கமாக செயல்பட்டு வருகிறோம். அரசியலுக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் இயக்கம் அ.ம.மு.க. கிடையாது.
உயிரோடு விளையாடக்கூடாது
இப்போது கூட ஒமைக்ரான் நோய்த்தொற்று சமூக பரவலாக ஆகிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் சொல்கிறார். ஆனால் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய தி.மு.க.வோ, தஞ்சையில் 5 ஆயிரம் பேரை கூட்டி நிகழ்ச்சியை நடத்தி உள்ளது. 
இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல், அரசாங்கமே மக்களின் உயிரோடு விளையாடாமல் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்தில் முறையிட்டுத்தான் எதிர்கொள்ள வேண்டியது வரும்.
அன்பான எச்சரிக்கை
இதை அன்பான ஒரு எச்சரிக்கையாக சொல்கிறோம். மக்களின் உயிரோடு யார் விளையாடினாலும் அதை எதிர்த்து செயல்பட வேண்டிய சமூக பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். 
டெல்டா பகுதி மக்கள் யாருக்கோ பயந்து விட்டு இவர்களுக்கு(தி.மு.க) வாக்களித்தார்கள். இன்றைக்கு இவர்களது சுயரூபம் வெளிப்பட்டு விட்டது. இன்னும் 6 மாதத்திற்கு பிறகு இவர்களது உண்மையான சுயரூபம் வெளிப்படும். 6 மாதத்திற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது எதையெல்லாம் எதிர்த்தார்களோ அதையெல்லாம் தற்போது ஆதரிக்கிறார்கள்.
ராஜேந்திர பாலாஜி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓடி, ஒளியக்கூடாது. வழக்கை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அது தான் ஒரு அரசியல்வாதிக்கு அழகு. 
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை வரும். யாரெல்லாம் விண்ணப்பதாரர்களோ அவர்களுக்கு எல்லாம் நகைக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டியது அரசின் கடமை.
எடப்பாடி பழனிசாமி வழியில் ஸ்டாலின்
எதையெல்லாம் அண்ணன் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது சொன்னார்களோ, தற்போது அண்ணன் பழனிசாமியை தாண்டி அவர் வழியில் மு.க.ஸ்டாலின் பயணம் செய்கிறார். மத்திய அரசு, தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். 
மு.க.ஸ்டாலினின் விடியல் அரசாங்கத்தின் சாயம் வெளுத்து வருகிறது. நமது முதல்-அமைச்சர், நான் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவன் என்கிறார். அவர் கூடுதல் கவனம் செலுத்தி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story