ஏற்காட்டில் கடும் குளிர்: ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின
ஏற்காட்டில் நிலவிய கடும் குளிர் காரணமாக நேற்று ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.
ஏற்காடு:
ஏற்காட்டில் நிலவிய கடும் குளிர் காரணமாக நேற்று ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.
கடும் குளிர்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த மாதம் கனமழை கொட்டி தீர்த்தது. தற்போது மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. குறிப்பாக இரவில் கடும் குளிர் நிலவி வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள் முன்பு தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கத்தை விட அதிகளவு பனிப்பொழிவு காணப்பட்டது. மேலும் கடும் குளிரும் நிலவியது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளேயே தஞ்சம் அடைந்தனர். நேற்று காலை 7 மணி வரை ஏற்காட்டில் பனிமூட்டம் காணப்பட்டது.
சாலைகள் வெறிச்சோடின
சாலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டதால் சில வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர். நேற்று நிலவிய பனிமூட்டம், கடும் குளிர் காரணமாக ஏற்காட்டில் பிரதான சாலைகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அவர்களும் ஸ்வெட்டர் மற்றும் குல்லா அணிந்தபடி சென்றனர். ஏற்காட்டில் நிலவிய கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story