பெண் கொலை:மகளுடனான கள்ள உறவை கண்டித்ததால் கொன்றது அம்பலம்


பெண் கொலை:மகளுடனான கள்ள உறவை கண்டித்ததால் கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 1 Jan 2022 2:40 AM IST (Updated: 1 Jan 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நடுரோட்டில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மகளுடனான கள்ள உறவை கண்டித்ததால் கொன்றதாக 2-வது கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் நடுரோட்டில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மகளுடனான கள்ள உறவை கண்டித்ததால் கொன்றதாக 2-வது கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மகள் கைது

பெங்களூரு பெல்லந்தூரில் வசித்து வந்தவர் அர்ச்சனா ரெட்டி (வயது 40). இவர், தனது முதல் கணவரான அரவிந்தை விவாகரத்து செய்துவிட்டு, 2-வதாக நவீன்குமார் என்பவரை திருமணம் செய்திருந்தார். முதல் கணவர் மூலமாக அர்ச்சனா ரெட்டிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த மாதம் (டிசம்பர்) 27-ந்தேதி பரப்பனஅக்ரஹாரா அருகே ஒசரோட்டில் வைத்து அர்ச்சனா ரெட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அர்ச்சனா ரெட்டியை கொலை செய்ததாக, அவரது 2-வது கணவர் நவீன்குமார், மகள் யுவிகா ரெட்டி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அர்ச்சனா ரெட்டி பெயரில் இருந்த சொத்துக்களை அடைய, அவரை தீர்த்து கட்டியதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

கள்ளத்தொடர்பு

இந்த நிலையில் நவீன்குமார், யுவிகா ரெட்டி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கணவரை விவாகரத்து செய்திருந்த அர்ச்சனா ரெட்டிக்கு 40 வயதாகிறது. அவரிடம் பல கோடி ரூபாய் சொத்து இருந்ததால் உடற்பயிற்சியாளரான நவீன்குமார் தன்னை விட 10 வயது மூத்தவரான அர்ச்சனா ரெட்டியை திருமணம் செய்திருந்தார். 

ஆனால் கடந்த சில மாதங்களாக அர்ச்சனா ரெட்டிக்கும், நவீன்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, யுவிகா ரெட்டியுடன் நவீன்குமார் நெருங்கி பழகி உள்ளார். பல்வேறு இடங்களுக்கு 2 பேரும் சுற்றி திரிந்துள்ளனர். இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ள உறவாக மாறி இருக்கிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது மகள் யுவிகா ரெட்டியுடன் நவீன்குமார் உல்லாசமாக இருப்பதை அர்ச்சனா ரெட்டி பார்த்திருக்கிறார்.

கொலை செய்ய திட்டம்

இதையடுத்து, நவீன்குமாரிடம் தனது மகளுடன் பழகுவதை நிறுத்தும்படி கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் நவீன்குமாருக்கு குறிப்பிட்ட அளவு பணத்தை கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற்றி இருக்கிறார். அப்போது நவீன்குமாருடன் சேர்ந்து யுவிகா ரெட்டியும் வீட்டைவிட்டு சென்றிருக்கிறார். 

இந்த நிலையில் அர்ச்சனா ரெட்டி கொடுத்த பணம் காலியானதால், ஆடம்பர வாழ்க்கை வாழ முடியாமல் நவீன்குமாரும், யுவிகா ரெட்டியும் சிரமப்பட்டு இருக்கிறார்கள். இதையடுத்து, அர்ச்சனா ரெட்டியை கொலை செய்ய நவீன்குமார் திட்டமிட்டு இருக்கிறார்.

இறுதி சடங்கில் பங்கேற்பு

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு அர்ச்சனா ரெட்டியிடம் இருக்கும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரிக்க நவீன்குமார் தீர்மானித்துள்ளார். இதற்கு யுவிகா ரெட்டியும் சம்மதித்துள்ளார். இதையடுத்து, கடந்த மாதம் 27-ந்தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து அர்ச்சனா ரெட்டியை நவீன்குமார் கொலை செய்திருந்தது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் தாய் கொலை செய்யப்பட்ட பின்பு யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல் இருக்க, அவருக்கு நடந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டு யுவிகா ரெட்டி நாடகமாடி இருந்தார். ஆனால் நவீன்குமார் சிக்கியதும், அவரிடம் நடத்திய விசாரணையின் போது யுவிகா ரெட்டிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவரையும் போலீசார் கைது செய்திருந்தனர்.

Next Story