எடப்பாடி அருகே வேன் மோதி 2 தொழிலாளர்கள் பலி-வேலை முடிந்து வீடு திரும்பியபோது பரிதாபம்
எடப்பாடி அருகே நூற்பாலை வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 தொழிலாளர்கள் பலியாகினர். அவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
எடப்பாடி:
எடப்பாடி அருகே நூற்பாலை வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 தொழிலாளர்கள் பலியாகினர். அவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
நண்பர்கள்
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி பகுதியை சேர்ந்தவர் மதுராஜ் மகன் மோகன்ராஜ் (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர்கள் மதிவாணன் (29), லெனின் (26). நண்பர்களான இவர்கள் 3 பேரும் பெயிண்டு அடிக்கும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். தினமும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக வேலைக்கு செல்வது வழக்கம்.
நேற்று காலை அவர்கள் கள்ளுக்கடை பகுதிக்கு பெயிண்டு அடிக்கும் வேலைக்காக சென்றனர். பின்னர் மாலை வேலையை முடித்து விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மோகன்ராஜ் ஓட்டி சென்றார்.
வேன் மோதியது
எடப்பாடி அருகே வேடன்காடு பகுதியில் எதிரே பணியாளர்களை ஏற்றி கொண்டு தனியார் நூற்பாலை வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேன் எதிர்பாராத விதமாக திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோகன்ராஜ், மதிவாணன், லெனின் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மதிவாணன், லெனினை மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
2 பேர் பலி
மதிவாணன் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் பலியானார். லெனினுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த பூலாம்பட்டி போலீசார், மோகன்ராஜ், மதிவாணன் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எடப்பாடி அருகே தனியார் நூற்பாலை வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story