‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
டாஸ்மாக் கடை அகற்றப்படுமா?
சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பூலாம்பட்டி செல்லும் மெயின் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு மதுபாட்டில்களை வாங்கும் மதுப்பிரியர்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் சாலையோர நடைபாதைகளில் அமர்ந்து குடிக்கின்றனர். மேலும் அவர்கள் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்கின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மது கடையை அந்த இடத்தில் இருந்து அகற்றி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், எடப்பாடி.
===
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கிருஷ்ணகிரியில் சென்னை மற்றும் பெங்களூரு சாலையில் பஸ் நிறுத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குப்பைகளை ஆங்காங்கே குவித்து வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஜெயக்குமார், கிருஷ்ணகிரி.
====
தெருவிளக்குகள் அமைக்கப்படுமா?
தர்மபுரி தாலுகா அலுவலக வளாகம், உதவி கலெக்டர் அலுவலகம், பழைய கோர்ட்டு வளாகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த பகுதியில் காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் அப்பகுதி மக்கள் நடைபயிற்சி செல்கின்றனர். இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருவிளக்குகள் அமைத்து தருவார்களா?
-வினோத், வெண்ணாம்பட்டி, தர்மபுரி.
===
அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட நல்லிபாளையம் பகுதியில் குடிநீர் பணிக்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அறிவிப்பு பலகை எதுவும் இல்லை. எனவே இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிப்பு பலகை வைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
-குமார், நாமக்கல்.
==
சாலையில் ஓடும் கழிவுநீர்
கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகானப்பள்ளி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முதல் தெருவில் 10 ஆண்டுகளுக்கு மேல் சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. துர்நாற்றம் அதிகம் வீசுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதுபற்றி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் பலன் இல்லை. இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ?
பி.பூபாலன், கட்டிகானப்பள்ளி, கிருஷ்ணகிரி.
==
குண்டும், குழியுமான சாலை
சேலத்தை அடுத்த பென்ஷன் லைன் வடக்கு தெரு, குகை ரோடு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்கும், பொதுமக்கள் நடப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர முன்வருவார்களா?
-சாராபானு, குகை, சேலம்.
==
நோய் பரவும் அபாயம்
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி 3-வது வார்டில் கடந்த 10 ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் வசதி இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அந்த பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரா.இளவரசன், ஆட்டையாம்பட்டி, சேலம்.
===
சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் முக்கியமான சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரிகின்றன. மேலும் அந்த மாடுகள் சாலையோரத்தில் படுத்துக்கொள்வதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல வேண்டும்.
-சங்கர், ஆத்தூர்.
===
அதிக சத்தம் ஆபத்து
சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் இறப்பு மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு அதிக சத்தத்தை உண்டாக்கும் பட்டாசு வெடிகளை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக தாரமங்கலம் அரசு மருத்துவமனை அருகே அதிக சத்தத்துடன் வெடி வெடிப்பதால் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மருத்துவமனை அருகே வெடிகள் வெடிப்பதை தவிர்க்க அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
-தமிழமுதன், தாரமங்கலம், சேலம்.
======
குளம்போல் தேங்கும் கழிவுநீர்
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, புவன கணபதி கோவில் பகுதியில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தின் அருகே கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கி.கோபால், புவனகணபதி கோவில் தெரு, சேலம்.
Related Tags :
Next Story