அறச்சலூரில் பரபரப்பு: தையல் தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை- எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல்; தி.மு.க. பிரமுகர் கைது


அறச்சலூரில் பரபரப்பு: தையல் தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை- எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல்; தி.மு.க. பிரமுகர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2022 2:56 AM IST (Updated: 1 Jan 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

அறச்சலூரில் தையல் தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

அறச்சலூர்
அறச்சலூரில் தையல் தொழிலாளி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தகராறு
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் தலவுமலை நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 55). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி சுந்தரி. இவர்களுக்கு பூவரசன் (23), ராகுல் (22) என்ற 2 மகன்கள் உள்ளனர். சுந்தரியும், மகன்கள் இருவரும் பெருந்துறையில் வசித்துவருகிறார்கள். வடிவேல் மட்டும் நாகராஜபுரத்தில் இருந்து வந்தார். தி.மு.க.வில் உறுப்பினராக இருந்த வடிவேல் சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். 
அதே பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (45). வடுகப்பட்டி பேரூராட்சி தி.மு.க. முன்னாள் கவுன்சிலர். தற்போது வார்டு செயலாளராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈஸ்வரமூர்த்தி மதுபோதையில் அங்குள்ள ஒரு விநாயகர் கோவிலில் அமர்ந்துகொண்டு அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சென்ற வடிவேல் ஈஸ்வரமூர்த்தியை தட்டி கேட்டுள்ளார்.
கல்லால் அடித்தார்
இதனால் வடிவேலுவுக்கும், ஈஸ்வரமூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரமூர்த்தி, கீழே கிடந்த கல்லை எடுத்து வடிவேலை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறி துடித்தபடி மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர். அப்போது ஈஸ்வரமூர்த்தி அங்கிருந்து சென்றுவிட்டார்.
பின்னர் வடிவேலுவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்கு சென்ற வடிவேல் இரவில் படுத்து தூங்கினார். ஆனால் நேற்று காலை வெகுநேரமாகியும் அவரது வீட்டு கதவு திறக்கப்படாமல் சாத்தப்பட்டே கிடந்தது.
படுக்கையில் பிணமானார்...
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீடு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வடிவேல் படுக்கையில் பிணமாக கிடந்தார். பின்னர் இதுபற்றி அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ. மற்றும் பா.ஜ.க.வினர் ஈரோடு-காங்கேயம் ரோட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் வடிவேலுவை ஈஸ்வரமூர்த்தி கொலை செய்ததாக கூறி ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தி.மு.க. நிர்வாகி கைது
இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறும்போது ‘‘இது திட்டமிட்ட கொலை. நேற்று முன்தினம் வடிவேல் பா.ஜ.க.வில் இணைந்ததால் ஆத்திரம் அடைந்த அவரை ஈஸ்வரமூர்த்தி கொலை செய்துள்ளார். இதனை கண்டிக்கிறோம். எனவே போலீசார் உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு போலீசார் கூறும்போது, ‘நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க.வினர் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஈரோடு-காங்கேயம் ரோட்டில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கொலை சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தி.மு.க. நிர்வாகியான ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர். மேலும் வடிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அறச்சலூரில் பா.ஜ.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story