வாசுதேவநல்லூரில் வீட்டின் கதவை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.21 லட்சம் கொள்ளை
வீட்டின் கதவை உடைத்து கொள்ளை
வாசுதேவநல்லூர்:
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பழைய ரஸ்தா தெருவில் வசிப்பவர் ஆண்டாள் ராஜா (வயது 60). வாசுதேவநல்லூர் கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளரான இவர் தற்போது ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று தன்னுடைய மனைவியுடன் சென்னையில் உள்ள மகளை பார்ப்பதற்காக சென்றார். ஆண்டாள் ராஜாவின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி ஆண்டாள் ராஜாவின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்து அதில் இருந்த 18 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று காலையில் ஆண்டாள் ராஜா தனது வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.
போலீசாரின் மோப்ப நாய் விக்கி சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, வீட்டில் இருந்து மேற்கு திசையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொள்ளை நடந்த ஆண்டாள் ராஜாவின் வீடானது வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையம் அமைந்துள்ள தெருவில் அமைந்துள்ளது. இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story