விக்கிரமசிங்கபுரம் அருகே மீண்டும் அட்டகாசம்: சிறுத்தை கடித்து 4 ஆடுகள் சாவு


விக்கிரமசிங்கபுரம் அருகே மீண்டும் அட்டகாசம்: சிறுத்தை கடித்து 4 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 1 Jan 2022 3:54 AM IST (Updated: 1 Jan 2022 3:54 AM IST)
t-max-icont-min-icon

சிறுத்தை கடித்து 4 ஆடுகள் சாவு

விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே சிறுத்தை அட்டகாசம் மீண்டும் தொடங்கி உள்ளது. அங்குள்ள வீட்டில் கட்டிப்போட்டு இருந்த 4 ஆடுகளை கடித்துக் கொன்றது. மேலும் ஒரு ஆட்டை தூக்கிச்சென்றது.
சிறுத்தை தாக்கியது
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் அனவன்குடியிருப்பு, திருப்பதியாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருவதோடு ஆடு, மாடுகளையும் வளர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அனவன்குடியிருப்பைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 58) என்பவர் கூலி வேலைப் பார்ப்பதோடு ஆடு வளர்த்து வருகிறார். வீட்டின் பின்புறம் தொழுவம் அமைத்து அதில் ஆடுகளை கட்டிவைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ஆடுகள் சத்தமிட்டன. இதனால் எழுந்து வந்து மாரியம்மாள் பார்த்தபோது ஆடுகளை சிறுத்தை தாக்கி கொண்டிருந்தது.
4 ஆடுகள் சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மின் விளக்கைப் போட்டதும் சிறுத்தை ஒரு ஆட்டை வாயில் கவ்வியபடி தப்பிச் சென்று விட்டது. சிறுத்தை தாக்கியதில் 4 ஆடுகள் செத்துக்கிடந்தன. ஒரு ஆடு காயமடைந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் வந்து பார்வையிட்டனர். மேலும் பாபநாசம் மலையடிவார கிராமங்களான செட்டிமேடு, வேம்பையாபுரம் பகுதிகளில் பகல் நேரத்திலேயே சிறுத்தை நடமாட்டம் இருக்கும் நிலையில் மற்றொரு கிராமமான அனவன்குடியிருப்பில் ஊருக்குள் நுழைந்து 4 ஆடுகளை சிறுத்தை தாக்கிக் கொன்றுள்ளது. இதனால் மலையடிவார கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இழப்பீடு
 மேலும் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, யானை, கரடி, மிளா உள்ளிட்ட மிருகங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு, வீட்டு விலங்குகளையும் தாக்கி கொன்று வருகிறது.
எனவே வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க வனத்துறை விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை சார்பில் மாரியம்மாளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story