கம்பத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உண்ணாவிரதம்


கம்பத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 1 Jan 2022 6:42 PM IST (Updated: 1 Jan 2022 6:42 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி நடத்திய உண்ணாவிரத போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம்:
கம்பத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கம்பராயப்பெருமாள் மற்றும் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் நிலத்தில் குடியிருந்து வருபவர்களுக்கு வாடகை கட்டணத்தை கோவில் நிர்வாகம் பல மடங்கு  உயர்த்தியது. இது குறித்து வாடகைதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதில் நோட்டீஸ் பெறப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் நிலுவை தொகை மற்றும் வாடகை பாக்கியை செலுத்த வேண்டும், இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இது கோவில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
இந்தநிலையில் கம்பத்தை ேசர்ந்த ஓய்வுபெற்ற கிராமநிர்வாக அதிகாரியான சுருளிவேலு என்பவர், ேநற்று கம்பம் வ.உ.சி. நினைவு படிப்பகம் முன்பு,"சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி" என்ற தலைப்பில் பல்வேறு கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை வைத்து அதன் அருகே அமர்ந்து தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அப்போது அவர், வாடகை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் கோஷம் எழுப்பினார். 
இது குறித்து தகவலறிந்ததும் கம்பம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தக்கூடாது எனக் கூறி சுருளிவேலுவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிலத்தில் குடியிருப்பவர்கள் திரண்டு வந்து தெற்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சுருளிவேலுவை விடுவிப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் போலீசார், இனிமேல் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என எச்சரிக்கை செய்து சுருளிவேலுவை விடுவித்தனர். இந்த சம்பவம் கம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story