2-ம் போக நெல் சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
2-ம் போக நெல் சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக கேரள மாநிலத்தில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.
இந்நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது 2-ம் போக நெல் சாகுபடிக்காக உழவு மற்றும் நடவுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு நேற்று முதல் வினாடிக்கு 600 கனஅடியில் இருந்து 1200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நேற்றைய நீர்மட்டம் 140.90 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 349 கன அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மில்லிமீட்டரில் வருமாறு: தேக்கடி-1, கூடலூர்-3.4, சண்முகா நதி-2.5, உத்தமபாளையம்-2.3, வைகை-1, மஞ்சளாறு-12, சோத்துப்பாறை-6.
Related Tags :
Next Story