அறுவடைக்கு தயாரான சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் பெய்த கனமழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் பெய்த கனமழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மழை பெய்ய தொடங்கியது. நேற்று 2-வது நாளாக இடைவிடாது கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மழையினால் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் காட்சியளித்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் பலரும் அவதியடைந்தனர்.
திருவாரூரில் பழைய பஸ் நிலையம் பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரை கடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மழையினால் மக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடியது. திருவாரூர் நகரில் நேதாஜி சாலை உள்பட பல இடங்களில் சாக்கடை நீருடன் மழைநீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஒடியதால் மக்கள் அவதியடைந்தனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.
நெற்பயிர்கள் சாய்ந்தன
திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இந்தநிலையில் மீண்டும் கடந்த 2 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாரான இருந்த சம்பா நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்துள்ளன. பல இடங்களில் வயல்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் சாய்ந்துள்ளதால் நெல்மணிகள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூழல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறுவை அறுவடையின் போது பெய்த கனமழையால் மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சம்பா அறுவடையின் போது மீண்டும் கனமழை பெய்வதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். எனவே மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார்குடி
மன்னார்குடி பகுதியில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இதனால் நகர பகுதியில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காலை முதலே விடாமல் பெய்த மழையினால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டது. மேலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். மன்னார்குடி, உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, பைங்காநாடு, மூவாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழை அறுவடைக்கு தயாராக உள்ள சம்பா பயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
நன்னிலம், வலங்கைமான்
நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து மழைநீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வலங்கைமான் பகுதிகளில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை காரணமாக ஆங்கிலப்புத்தாண்டு களையிழந்து காணப்பட்டது.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. சாலைகளில் கழிவுநீர் சாக்கடை நீரும், மழைநீரும் கலந்து ஓடியது. இதனால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த மழையால் சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ரொக்க குத்தகை, சிங்களாந்தி, சுந்தரபுரி, நுணாக்காடு, எழிலூர், வேளூர், பாமணி உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதிகளில் நேற்றுமுன்தினம் பலத்த மழை பெய்தது. நேற்று 2-வதுநாளாக கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, பூதமங்கலம், தண்ணீர்குன்னம், வடபாதிமங்கலம், ஓகைப்பேரையூர், ராமநாதபுரம், திருராமேஸ்வரம், கோரையாறு, ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், நாகங்குடி, பழையனூர், அதங்குடி, வெள்ளக்குடி, வாழச்சேரி, மரக்கடை, விழல்கோட்டகம், மணல்கொண்டான், மேல்கொண்டாழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வயல்களிலும், சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும், குடியிருப்புகள் பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா தாளடி பயிர்கள் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் உள்ள வயலில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மழை காரணமாக கூத்தாநல்லூர் பகுதிகளில் ஆங்கிலப்புத்தாண்டு பண்டிகை களையிழந்து காணப்பட்டது.
Related Tags :
Next Story