கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மானியத்தில் வேளாண் எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மானியத்தில் வேளாண் எந்திரங்களை பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் எந்திரங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2021-2022-ம் ஆண்டில் சாகுபடி செய்யும் விவசாயிகள், வேலையாட்கள் பற்றாக்குறை நிலவுவதை கருதியும் குறித்த காலத்தில் பயிர் சாகுபடி மேற்கொள்ள வேளாண் எந்திரமயமாக்குதல் திட்டத்தில் பொது பிரிவினருக்கு 2 டிராக்டர்கள், 14 பவர் டிரில்லர்கள், 3 விசை களையெடுக்கும் கருவிகள் மற்றும் 5 விசைத்தெளிப்பான்கள் என மொத்தம் 24 எந்திரங்கள் ரூ.18 லட்சத்து 41 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
இதே போல் சிறப்பு கூறு பிரிவினருக்கு(எஸ்.சி) 3 டிராக்டர்கள், 6 பவர் டிரில்லர்கள், 3 ரொடோவேட்டர்கள், 2 விசை களையெடுக்கும் கருவிகள் மற்றும் 6 விசைத்தெளிப்பான்கள் என மொத்தம் 20 எந்திரங்கள் ரூ.20 லட்சத்து 36 ஆயிரம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
ரூ.38 லட்சம் மானியம்
அதன்படி பொதுப்பிரிவு மற்றும் சிறப்பு கூறு பிரிவினருக்கு நடப்பாண்டில் மொத்தம் 44 கருவிகளுக்கு ரூ.38 லட்சத்து 77 ஆயிரம் மானியத்தில் வேளாண் கருவிகள், வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் விவசாயிகள் மத்திய அரசின் இணைய தளமான www.agrimachinery.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் மேற்குறிப்பிட்ட கருவிகளுக்கான மானியம் பெற்று பயன் பெறலாம்.
கூடுதல் தகவல்களுக்கு
மேலும் இதுபற்றிய கூடுதல் தகவல்களை பெறுவதற்கு உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை), கள்ளக்குறிச்சி அலுவலகம், தொலைபேசி எண் (04151-291125), உதவி செயற்பொறியாளர் (வே.பொ.), திருக்கோவிலூர் அலுவலகம்(04153-253333), செயற்பொறியாளர்(வே.பொ.), விழுப்புரம் அலுவலகம் (04146-294888) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story