அதிகளவில் கரும்புகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு


அதிகளவில் கரும்புகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 1 Jan 2022 9:51 PM IST (Updated: 1 Jan 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

அதிகளவில் கரும்புகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் கொட்டும் மழையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


விழுப்புரம்,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொருட்களில் கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கரும்பு இடம்பெற்றுள்ளது.

இதற்காக விழுப்புரம் அருகே பிடாகம், நத்தமேடு, குச்சிப்பாளையம், மரகதபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் கரும்புகளை சாகுபடி செய்துள்ளனர்.

 கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் இந்த கரும்புகளை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.

குறைவான விலை நிர்ணயம்

கரும்புகளை சாகுபடி செய்துள்ள  ஒவ்வொரு விவசாயியிடம் இருந்தும் கடந்த ஆண்டு 20 கரும்புகள் கொண்ட கட்டுகளை 250 கட்டுகள் வரை மொத்தமாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் கொள்முதல் செய்த நிலையில் இந்த ஆண்டு ஒவ்வொரு விவசாயியிடம் இருந்தும் 60 முதல் 100 கட்டுகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

அதுமட்டுமின்றி 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டுக்கான விலையை கடந்த ஆண்டு ரூ.340 என்று நிர்ணயம் செய்து கொள்முதல் செய்த நிலையில் இந்த ஆண்டு ரூ.300 வழங்குவதாக அதிகாரிகள் நிர்ணயம் செய்ததாக தெரிகிறது.


இந்த விலை கட்டுப்படியாகாது என்றும், இதே விலையில் கரும்புகளை கொள்முதல் செய்தால் நஷ்டம்தான் ஏற்படும் என்பதால் கரும்பு கட்டு ஒன்றுக்கு ரூ.400 வரை விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், கடந்த ஆண்டைப்போலவே தற்போது அதிகளவில் கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இருப்பினும் அதற்கான உரிய பதிலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

விவசாயிகள் சாலை மறியல்

இந்நிலையில் ஆத்திரமடைந்த கரும்பு விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணியளவில் கரும்புகளுடன் பிடாகம் மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்தனர். 

பின்னர் அவர்கள் அனைவரும் காலை 11.15 மணியளவில் திடீரென அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் மழை பெய்தது. அதை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையிலும் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை காலை 11.45 மணியளவில் சாலையோரமாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

பேச்சுவார்த்தை

அதனை தொடர்ந்து அங்கு விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் நேரில் வந்து கரும்பு விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளை  கேட்டறிந்த அவர், இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய ஏற்பாடு செய்வதாக கூறினர். 

இதற்கிடையே  நேற்று மாலை கரும்பு விவசாயிகளை அழைத்து தாலுகா அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது ஒரு விவசாயியிடமிருந்து 20 கரும்புகள் கொண்ட 300 கட்டுகளை வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. 

இதனை ஏற்றுக்கொண்டு கரும்பு விவசாயிகள் அனைவரும் அங்கிருந்து சமாதானமாக சென்றனர். இதையடுத்து நாளை (திங்கட்கிழமை) முதல் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு அந்தந்த தோட்டத்தில் இருந்து நேரடியாக லாரிகள் மூலம் கரும்புகள், மாவட்டத்திலுள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Next Story