நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்தது.


நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்ந்தது.
x
தினத்தந்தி 1 Jan 2022 9:53 PM IST (Updated: 1 Jan 2022 9:53 PM IST)
t-max-icont-min-icon

நூல் விலை கிலோவுக்கு நேற்று ரூ.30 உயர்ந்தது. இதனால் பின்னலாடை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயம் உள்ளதாக தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்
நூல் விலை கிலோவுக்கு நேற்று ரூ.30 உயர்ந்தது. இதனால் பின்னலாடை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயம் உள்ளதாக தொழில்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
நூல் விலை தொடர்ந்து உயர்வு
திருப்பூரின் பின்னலாடை தொழிலுக்கு மூலப்பொருளாக நூல் விளங்கி வருகிறது. நூல் விலையை பொறுத்தே பனியன் உற்பத்தியாளர்கள் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டு ஆர்டர்களை எடுத்து செய்வது வழக்கம். நூற்பாலைகளில் இருந்து நூலை பெற்று உரிய காலத்துக்குள் ஆடைகளை தயாரித்து அனுப்பிவைக்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டாக நூல் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே மாதத்தில் ரூ.50 உயர்த்தப்பட்டதால் பின்னலாடை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. அதன்காரணமாக ஒருநாள் முழு வேலைநிறுத்த போராட்டத்தை தொழில்துறையினர் மேற்கொண்டனர். பின்னர் கடந்த டிசம்பர் மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அவர்கள் சிறிது நிம்மதி அடைந்தனர்.
கிலோவுக்கு ரூ.30 அதிகரிப்பு
இந்தநிலையில் நேற்று நூல் விலை கிலோவுக்கு ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளது பனியன் தொழில்துறையினருக்கு பேரிடியாக அமைந்துள்ளது. அதாவது 20-ம் நம்பர் கோம்டு ரக நூல் (வரி நீங்கலாக) கிலோ ரூ.325, 24-ம் நம்பர் ரூ.335, 30-ம் நம்பர் ரூ.345, 34-ம் நம்பர் ரூ.365, 40-ம் நம்பர் ரூ.385 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் ஆடைகள் உற்பத்தி தொழிலை செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக புலம்பி வருகிறார்கள்.
அதாவது தற்போது அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து சீனாவுக்கு செல்லும் ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி திரும்பியுள்ளன. அதுபோல் உள்நாட்டு ஆடை உற்பத்திக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த காலத்தில் கடுமையான நூல் விலை உயர்வால் ஆடைகளை உற்பத்தி செய்ய முடியாமல் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். ஆர்டர்கள் அதிகம் கிடைத்தும் அதை செய்து கொடுக்க துரதிர்ஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் வேலையிழக்கும் அபாயமும் உள்ளது. இதனால் இந்த நூல் விலையை கட்டுப்படுத்துவதுடன் விலையேற்றத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்று பனியன் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செயற்கை தட்டுப்பாடு
இதுகுறித்து டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் கூறும்போது, நூல் விலை இன்று (நேற்று) கிலோவுக்கு ரூ.30 அதிகரித்துவிட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று வரை நூல் விலை கிலோவுக்கு ரூ.150 உயர்ந்துள்ளது. அதாவது 30 எஸ் ரகம் கிலோ ரூ.200-ல் இருந்து தற்போது ரூ.350 வரை உயர்ந்து விட்டது.
நூற்பாலைகளிடம் இருந்து நூலை நாங்கள் பெற்று ஆடைகளை உற்பத்தி செய்கிறோம். பஞ்சு விலை உயர்வால் நூல் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள். இது தவறான போக்காகும். பஞ்சு விலை குறையும் போது நூல் விலையை குறைக்க மறுக்கிறார்கள். தற்போது செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பஞ்சின் விலையை உயர்த்தியுள்ளனர். பஞ்சு ஏற்றுமதி என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தொழில் முடங்கும்
நூற்பாலை உரிமையாளர்கள் மத்திய அரசுடன் பேசி பஞ்சுக்கான விலையை கட்டுப்படுத்த ஒட்டுமொத்தமாக கோரிக்கை வைக்க வேண்டும். பஞ்சை வாங்கி நூல் உற்பத்தி செய்து பின்னர் ஆடை தயாரிப்பு வரை உற்பத்தி செய்யும் வகையில் பெரிய நிறுவனங்கள் 10 சதவீதம் திருப்பூரில் உள்ளன. மீதம் உள்ள 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர பனியன் உற்பத்தி நிறுவனங்கள் தான். ஆடை உற்பத்தியில் 70 சதவீதம் திருப்பூரில் நடக்கிறது.
இந்த நூல் விலை உயர்வால் 90 சதவீத உற்பத்தியாளர்கள் தொழில் நசுக்கப்பட்டுள்ளது. ஆர்டர்கள் போதுமான அளவு உள்ளது. 10 சதவீத பெரிய நிறுவனங்களே அந்த ஆர்டர்கள் அனைத்தையும் பெற்று செய்யும் நிலை இருக்கிறது. இதனால் பெருமளவு தொழில் நிறுவனங்கள் முடங்கும்.
முதல்-அமைச்சரை சந்திக்க முடிவு
ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதமாக உயர்த்தும் மத்திய அரசின் முடிவை அறிந்து ஒருமித்த குரலாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததன் பயனாக 5 சதவீதமாக வரியை தொடர மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுபோல் பல்வேறு துறையில் உள்ள பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஒன்று சேர்ந்து ஒருமித்த குரலாக அரசிடம் கோரிக்கை வைத்தால் மட்டுமே அபரிமிதமாக உயரும் நூல் விலையை கட்டுப்படுத்த முடியும். 
இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து முறையிட அனுமதி கேட்டுள்ளோம். அவர் மூலமாக மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். நூல் விலை கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார்.

Next Story