கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
காரைக்குடி,
ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில்
2021-ம் ஆண்டு விடைபெற்று நேற்று 2022-ம் ஆண்டு பிறந்தது. ஆங்கில புத்தாண்டையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற நாட்களில் அபிஷேக, அலங்காரமும் நடைபெறும். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று பத்திரகாளி அம்மனுக்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டிருந்தது.நேற்று காலை முதல் மாலை வரை பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இதேபோல் திருப்புவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குன்றக்குடி கோவில்
இதேபோல் புத்தாண்டையொட்டி குன்றக்குடி சண்முகநாதபெருமான் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
காரைக்குடி டி.டி.நகர் கற்பகவிநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கற்பகவிநாயகருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தங்க அங்கி சாத்தப்பட்டு கற்பகவிநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை முத்துகுருக்கள் செய்திருந்தார்.
காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள திருவேங்கடமுடையான் கோவில், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில், காரைக்குடியை அடுத்த வ.சூரக்குடி சிவஆஞ்சநேயர் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்பட பல கோவில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேவுகப்பெருமாள் அய்யனார்
சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்துக்கு உட்பட்ட சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலை தேவி, பிடாரி அம்மன், பணி கருப்பர் சுவாமி, சின்ன கருப்பர், பெரிய கருப்பர், வீரணசாமி மற்றும் வள்ளி தெய்வானையுடன் உள்ள பாலசுப்பிரமணியர் ஆகிய சுவாமிகளுக்கு 21 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சேவுகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கலை தேவிக்கு வெள்ளி அங்கி சாத்தப்பட்டு விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்தனர். சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர்,. நாடார் பேட்டை பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story