பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை


பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
x
தினத்தந்தி 1 Jan 2022 10:06 PM IST (Updated: 1 Jan 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பொழிவு ஏற்பட்டதால் பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை

தளி
உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு கிழவிப்பட்டிஆறு, உப்புமண்ணபட்டிஆறு, பாலாறு, உழுவியாறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. ஆறுகளுக்கு வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது நீர்வரத்து ஏற்படுகிறது. வனப்பகுதியில் பல்வேறு வழிகளில் ஓடிவந்து இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகிறது. 
வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அதில் கரைந்து விடுவதால் அருவியில் குளிப்பதால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகின்றனர்.
இந்த சூழலில் நேற்று ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருமூர்த்திமலையில் ஏராளமான சுற்றுலாபயணிகள் மற்றும் பக்தர்கள் குவிந்தனர். ஆனால் நேற்று காலை பஞ்சலிங்க அருவியில் நீராதாரங்களில் திடீரென மழை பெய்தது. இதனால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் நிலவியதால் அருவியில் குளிப்பதற்கு  கோவில் நிர்வாகம் தடை விதித்தது. அதன் பின்பு மதியம் 12 மணியளவில் அருவி இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதையடுத்து சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதற்கு கோவில் நிர்வாகம் தயாரானது. ஆனால் மீண்டும் மழை பொழிவு ஏற்பட்டதால் நீர்வரத்து சற்று அதிகரித்தது. அதைத்தொடர்ந்து நேற்று அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதைத்தொடர்ந்து கோவிலின் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச்சென்றனர். சிலர் அணைப்பகுதியில் அமர்ந்து புகைப்படமும், செல்பியும் எடுத்துக்கொண்டனர். இதனால் கோவில் மற்றும் அணைப்பகுதியில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் நிலவியதால் தளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story