கடந்த ஆண்டு மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 2238 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தகவல்


கடந்த ஆண்டு  மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 2238 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து  கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2022 4:40 PM GMT (Updated: 1 Jan 2022 4:40 PM GMT)

கடந்த ஆண்டு2021 மது அருந்திக்கொண்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 2,238 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தெரிவித்துள்ளார்


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

30 கொலை வழக்குகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் 30 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டள்ளனர். 218 திருட்டு வழக்குகள் பதிவானதில் 118 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் ரவுடிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். களவுபோன ரூ.1 கோடியே 18 லட்சத்து 52 ஆயிரத்து 750 மதிப்பிலான நகை, பணம் உள்ளிட்ட பொருட்களில் ரூ.88 லட்சத்து 13 ஆயிரத்து 750 மதிப்பிலான நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 
பழைய குற்றவாளிகள் குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் 319 பழைய குற்றவாளிகள் பிரிவு 110-ன் கீழ் 215 நன்னடத்தை பிணையம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 33 குற்றவாளிகளை பிரிவு 109-ன் கீழ் அமைதி காக்கும் வகையில் சம்பந்தப்பட்ட உட்கோட்ட நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்ற 14 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

3,219 பேர் கைது

மாவட்டத்தில் சாராயம், வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக  3,302 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,219 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 36,989 லிட்டர் சாராயம், 2,265 லிட்டர் எரிசாராயம், 3,45,951 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 8,370 கிலோ வெல்லம், 65,536 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 172 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்த 15 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டில் 891 வாகன விபத்துகள் நடைபெற்றது. இதில் 302 பேர் உயிரிழந்தனர். 1,021 பேர் காயமடைந்தனர். விபத்துகளை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதன் காரணமாக 2021-ல் 1048 வாகன விபத்துகள் நடைபெற்றது. இதில் 244 பேர் உயிரிழந்துள்ளனர். 1,240 பேர் காயமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டை காட்டிலும் 2021-ம் ஆண்டு வாகன விபத்தில் 58 உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. 

ரூ.41½ லட்சம்அபராதம்

சாலை விதிகளை மீறிய குற்றத்துக்காக ரூ.41 லட்சத்து 67,600 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய 2,238 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 174 மணல் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 189 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 253 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
27 லாட்டரி, 23 கஞ்சா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்ற 14 ரவுடிகள் மற்றும் மதுவிலக்கு, கஞ்சா, லாட்டரி, மணல் கடத்தல் போன்ற குற்றசம்பங்களில் தொடர்ந்து ஈடுபட்ட 34 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 700 சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
24,059 கண்காணிப்பு கேமரா
தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்காதது தொடர்பாக 29,463 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 4,150 இடங்கள் கண்டறியப்பட்டு, இதில் 3,250 இடங்களில் 4,059 கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story