திருப்பூர் மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகரிப்பு
பனிப்பொழிவு சற்று குறைந்ததால் திருப்பூர் மார்க்கெட்டிற்கு பூக்களின் வரத்து அதிகரித்தது
திருப்பூர்
திருப்பூர் பல்லடம் ரோடு காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சத்தியமங்கலம்,திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்தும் பல வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது பரவலாக பனிப்பொழிவு அதிகம் இருந்து வந்த காரணத்தால் கடந்த ஒரு மாதமாகவே திருப்பூருக்கு வெளியூரிலிருந்து வரக்கூடிய பூக்களின் வரத்து குறைந்தது. வழக்கமாக தினமும் சுமார் 30 டன் பூக்கள் வந்துகொண்டிருந்த நிலையில் சுமார் 7 டன் பூக்கள் மட்டுமே வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பனிப்பொழிவு சற்று குறைந்ததால் நேற்று மார்க்கெட்டிற்கு பூ வரத்து சற்று அதிகமாக இருந்தது. மல்லிகை, முல்லை, உள்பட அனைத்து வகை பூக்களும் சேர்த்து சுமார் 20 டன் பூக்கள் வந்தது. இதில் செவ்வந்தி பூவின் வரத்து அதிகமாக இருந்தது.
நேற்று மல்லிகை பூ கிலோ ரூ.1200 முதல் ரூ.1400 வரைக்கும், ஜாதிமல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.120, அரளி ரூ.220, சம்பங்கி ரூ.120, பட்டு பூ ரூ.120 காக்கடா ரூ.400 ஆகிய விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமாக புத்தாண்டு தினத்தில் பூக்களின் விலை இன்னமும் அதிகமாக இருக்கும். ஆானல் நேற்று பூ வரத்து சற்று அதிகமாக இருந்ததால் விலை பெரிய அளவில் உயரவில்லை. இதனால் பூக்களின் விற்பனை அதிகமாக இருந்தது.
Related Tags :
Next Story