கனரக வாகனங்கள் வேலூர் கிரீன்சர்க்கிள் வர தடை
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் இருந்து காட்பாடி செல்லும் கனரக வாகனங்கள் கிரீன்சர்க்கிள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
வேலூர்
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் இருந்து காட்பாடி செல்லும் கனரக வாகனங்கள் கிரீன்சர்க்கிள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
வேலூர் கிரீன்சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நெரிசலை குறைக்க அவ்வப்போது போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது.
இந்த நிலையில், வேலூர் பகுதியில் இருந்து காட்பாடி மற்றும் ஆந்திரா நோக்கிச் செல்லும் வாகனங்கள் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் மற்றும் பஸ் ஷெட் வழியாக திருப்பி விடப்படுகிறது. அந்த வாகனங்கள் சர்வீஸ் சாலையில் இணைந்து சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வலதுபுறமாக திரும்பி சர்வீஸ் சாலை, புதிய பாலாறு பாலம் வழியாக காட்பாடி செல்ல வேண்டும். வேலூரில் இருந்து காட்பாடி செல்பவர்கள் கிரீன் சர்க்கிள் பகுதிக்கு வருவதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,
மேலும், வாலாஜாவில் இருந்து காட்பாடி செல்ல வேண்டிய வாகனங்கள் (கலெக்டர் அலுவலகம் -கிரீன்சர்க்கிள்) சர்வீஸ் சாலையில் (ஜவுளிக்கடை அருகே) இறங்காமல் நேராக கிரீன் சர்க்கிள் மேம்பாலத்தை கடந்து சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சென்று பாலாற்று பாலம் வழியாக செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையிலேயே...
இந்த போக்குவரத்து மாற்றம் புத்தாண்டு தினமான நேற்று அமலுக்கு வந்தது. அதன்படி முதல் கட்டமாக பஸ்களை தவிர சென்னை, வாலாஜா பகுதிகளில் இருந்து காட்பாடிக்கு வரும் கனரக வாகனங்கள் கிரீன் சர்க்கிள் பகுதிக்கு வர அனுமதிக்கப்படவில்லை.
சர்வீஸ் சாலையில் போக்குவரத்து போலீசார், அந்த வழியாக வந்த வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பிவிட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் சில வாகனங்கள் வள்ளலார் அல்லது சத்துவாச்சாரி பகுதியில் சர்வீஸ் சாலையில் இறங்கி கிரீன்சர்க்கிள் நோக்கி வந்தது. அந்த வாகனங்களையும் சர்வீஸ் சாலையில் (ஜவுளிக்கடை அருகே) நின்றிருந்த போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பி விட்டனர்.
அனுமதி இல்லை
இந்த வாகனங்கள் நேரடியாக சென்று சேண்பாக்கம் செல்லும் சர்வீஸ் சாலையில் இறங்கி அங்கிருந்து சேண்பாக்கம் ரெயில்வே பாலம் வழியாக திரும்பி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலத்தின் வழியாக காட்பாடி சென்றன.
இந்த நடவடிக்கை காரணமாக கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story