இன்று ஜெயந்தி விழா: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலைகள் அணிவிக்கப்படுகிறது-தரிசனத்துக்கு 4 ஆயிரம் பேர் முன்பதிவு


இன்று ஜெயந்தி விழா: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலைகள் அணிவிக்கப்படுகிறது-தரிசனத்துக்கு 4 ஆயிரம் பேர் முன்பதிவு
x
தினத்தந்தி 1 Jan 2022 11:21 PM IST (Updated: 1 Jan 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஜெயந்தி விழாவையொட்டி சாமிக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலை அணிவிக்கப்படுகிறது. சாமி தரிசனம் செய்ய 4 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல்:
ஆஞ்சநேயர் கோவில்
நாமக்கல் நகரின் மைய பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஆண்டு தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு சாமிக்கு 1 லட்சத்து 8 வடைமலை சாத்தப்படுகிறது. இந்த வடைகள் தயாரிக்கும் பணி கடந்த 28-ந் தேதி தொடங்கியது. இதில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 32 பேர் ஈடுபட்டனர். இந்த பணி நேற்று முன்தினம் இரவு முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று வடைகளை மாலைகளாக தொடுக்கும் பணி நடைபெற்றது.
அமைச்சர்கள் பங்கேற்பு
இன்று காலை 11 மணிக்கு ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், பால், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
இதையொட்டி கோவில் முழுவதும் சுமார் 2 டன் சாமந்தி பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. விரைவாக சாமியை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.250, ரூ.20 கட்டணத்திலும், இலவசமாக தரிசனம் செய்ய ஒரு வழியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவலை தடுக்க முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் நேற்று வரை 4 ஆயிரம் பக்தர்கள் பதிவு செய்து உள்ளனர். இவர்களில் ஒரு மணி நேரத்திற்கு 500 பேர் வீதம் தரிசனம் செய்ய அனுப்பப்பட இருப்பதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
350 போலீசார் பாதுகாப்பு
மேலும் பக்தர்கள் வரிசையாக சென்று தரிசனம் செய்ய வசதியாக கோவில் முன்பு போலீசார் இரும்பு கம்பிகளால் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று கோட்டை சாலையில் வாகனங்கள் செல்ல போலீசார் தடைவிதித்து உள்ளனர். இந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட உள்ளன.
இதற்கிடையே பாதுகாப்பு ஏற்பாடுகளை நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் நேற்று பார்வையிட்டார். இன்று சுமார் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story