அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி மற்றும் கொள்ளிடத்தில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி மற்றும் கொள்ளிடத்தில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் அகனி, நிம்மேலி, வள்ளுவக்குடி, மருதங்குடி, புங்கனூர், கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், திருப்புங்கூர், கன்னியாகுடி, கதிராமங்கலம், கற்கோவில், காரைமேடு, சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, விளந்திட சமுத்திரம், அத்தியூர், கடவாசல், வடகால், எடமணல், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
இதேபோல் பல்வேறு இடங்களில் கதிர் வரும் நிலையில் உள்ள சம்பா நெற்பயிர்கள் அடியோடு மழைநீரில் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள்.
இதேபோல் சீர்காழி தாலுகாவில் திடல் பகுதியில் பயிரிடப்பட்ட நிலக்கடலை, உளுந்து, பயறு உள்ளிட்ட எண்ணெய்வித்து பயிர்கள் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், புற்றடி மாரியம்மன் கோவில் சாலை, தென்பாதி மெயின்ரோடு, திருவள்ளுவர் நகர் செல்லும் சாலை, மதினா நகர் உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
சீர்காழி நகராட்சி ஆணையர் பட்டுசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பொக்லின் எந்திரம் மூலம் மழை நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கொள்ளிடம்
கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், தண்டேசநல்லூர், காமராஜர்நகர், ஆலாலசுந்தரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நடவு செய்த நெற்பயிர் இன்னும் 15 நாட்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து வந்தது. இந்தநிலையில் இந்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. இதனால் ஆச்சாள்புரம் பகுதியில் மட்டும் 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதேபோல் குன்னம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் கொள்ளிடம் பகுதியில் மொத்தத்தில் 1,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து ஆச்சாள்புரம் விவசாயிகள் கூறுகையில், சம்பா நெற்பயிர்கள் 15 நாட்களில் அறுவடை செய்யும் தருவாயில் இருந்தது. இந்தநிலையில் எதிர்பாராத வகையில் கனமழை பெய்ததால் ஆச்சாள்புரத்தில் மட்டும் 1,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்தன. கொள்ளிடம் ஒன்றியத்தில் மொத்தத்தில் 3 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து வீணாகி விட்டது. எனவே அரசு அதிகாரிகள் நேரில்வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை மற்றும் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மயிலாடுதுறை
தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் கடற்கரையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி கடற்கரையோர மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் விட்டு, விட்டு மழை பெய்தது.
நேற்று அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை தொடர்மழை பெய்தது. நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 60 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- சீர்காழி-44, மயிலாடுதுறை-37, மணல்மேடு-31, தரங்கம்பாடி-11.
திருக்கடையூர்
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ரூ.25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உள்ள திருக்கடையூர், சீவகசிந்தாமணி, வளையல் சோழகன், கிள்ளியூர், கண்ணங்குடி, காலாகட்டளை, வெள்ளைதிடல், பிள்ளை பெருமாநல்லூர், டி. மணல்மேடு, கிடங்கல், ஆக்கூர், மடப்புரம், மாமாகுடி, மருதம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக திடீரென பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. தொடர்ந்து மேற்கண்ட பகுதிகளில் மழை பெய்து வருததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் வயல்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் இதுகுறித்து திருக்கடையூர் விவசாயி ராமமூர்த்தி கூறுகையில், மேற்கண்ட பகுதியில் சமீபத்தில் பெய்த மழையினால் சம்பா நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து விட்டன. எனவே அரசு 100 சதவீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story