2 ஆண்டுகளுக்கு பிறகு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தங்கத்தேரோட்டம் கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் பங்கேற்பு


2 ஆண்டுகளுக்கு பிறகு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தங்கத்தேரோட்டம் கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Jan 2022 11:33 PM IST (Updated: 1 Jan 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தங்கத்தேரோட்டத்தில் கொட்டும் மழையிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை:
திருவப்பூர் முத்துமாரியம்மன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலாகும். மக்களை காக்கும் சக்தியாக விளங்கும் அம்மனை வழிபட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிகம் வருவது உண்டு. பய, பக்தியுடன் அம்மனை தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உள்பட கடந்த 2 ஆண்டுகளாக கோவிலில் தங்கத்தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.
தங்கத்தேர்
இந்த நிலையில் கோவிலில் தங்கத்தேரோட்டம் நடைபெற பக்தர்கள் கோரிக்கை எழுப்பிய நிலையில் கோவில் அதிகாரிகள், அறக்கட்டளை நிர்வாகிகள், ஆன்மிக அமைப்பினர் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ஆங்கில புத்தாண்டான ஜனவரி மாதம் 1-ந் தேதி மாலை தங்கத்தேரோட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி கோவிலில் நேற்று தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். மாலை 6 மணிக்கு மேல் தங்கத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். அப்போது முத்துராஜா எம்.எல்.ஏ., கோவில் நிர்வாக அதிகாரி சரவணன், கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, அறக்கட்டளை நிர்வாகிகள், தக்கார், திருக்கோயில் பேரியக்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொட்டும் மழையிலும்...
தங்கத்தேர் கோவில் வெளிப்பிரகாரத்தை ஒரு முறை சுற்றி வந்து நிலையை வந்தடைந்தது. தேரோட்டம் தொடங்குகிற நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து இடைவிடாது பெய்தது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்கத்தேரோட்டத்தை பக்தியுடன் கண்டுகளித்தனர். 
மேலும் பக்தர்கள் பலர் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். தங்கத்தேர் முன்பு பெண் பக்தைகள் கும்மியடித்து அம்மன் பாடல்களை பாடியபடி சென்றனர். பக்தர்கள் மனமுருக அம்மனை வேண்டினர். புத்தாண்டு தினத்தில் தங்கத்தேரில் அம்மனை கண்டு தரிசனம் செய்ததில் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story